SAFF கிண்ண தொடருக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு

1932

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் மிகப் பெரிய தொடரான ”SAFF சுசுகி கிண்ண” தொடருக்கான 20 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை குழாம் இன்று (24) இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் (FFSL) அறிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்ந்து பல மாதங்களாக இடம்பெற்ற பயிற்சிகள், பயிற்சிப் போட்டிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் என்பவற்றின் நிறைவாக தெரிவுசெய்யப்பட்ட இந்த தேசிய அணிக் குழாமை அறிவிக்கும் விஷேட ஊடக சந்திப்பு இலங்கை கால்பந்து இல்லத்தில் (FFSL தலைமையகம்) இடம்பெற்றது.

லிதுவேனியாவுடனான மோதலை சமநிலையில் முடித்த இலங்கை

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இன்று (08) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த மோதல்…

இந்தியா, மாலைதீவுகள், நேபால், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகிய 7 நாடுகள் பங்கு கொள்ளும் இம்முறை SAFF சுசுகி கிண்ணத் தொடரில் இலங்கை அணி பலம் மிக்க இந்தியா மற்றும் மாலைதீவுகள் அணிகளுடன் குழு B யில் மோதவுள்ளது.

அதன்படி, இலங்கை அணி செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி தமது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன, தொடர்ந்து 7ஆம் திகதி மாலைத்தீவுகள் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. எனினும், இலங்கை அணி இந்த தொடருக்கு முன்னர் ஆகஸ்ட் 29ஆம் திகதி போட்டியை நடாத்தும் பங்களாதேஷ் அணியுடன் நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கான பயிற்சியாக, இலங்கை அணி ஐரோப்பிய நாடான லிதுவேனிய அணியுடன் ஒரு நட்பு ரீதியிலான ஆட்டத்தில் கடந்த ஜூலை 8ஆம் திகதி கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் விளையாடியது. அந்த ஆட்டத்தை கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் நிறைவு செய்த இலங்கை அணி, தொடர்ந்து ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து அங்கு பயிற்சிகள் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் கலந்து கொண்டது.

இவ்வாறு, கடந்த ஏப்ரல் மாதம் வீரர்களின் ஆரம்ப கட்டத் தெரிவு இடம்பெற்றது முதல், தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலியின் கண்கானிப்பின்கீழ் இடம்பெற்ற தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் பயிற்சிப் போட்டிகளின் நிறைவிலே தற்பொழுது 20 பேர் அடங்கிய இந்த இறுதிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு கால்பந்து விளையாட்டு குறித்து பக்கீர் அலி

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் வடக்கு மற்றும் கிழக்கு…

லிதுவேனிய அணியுடனான மோதலுக்கு அணியின் தலைவராக செயற்பட்ட இலங்கை கடற்படை அணியின் பின்கள வீரர் சுபாஷ் மதுசான், நடைபெறவுள்ள அடுத்த தொடருக்கும் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.  இந்த அணி 3 கோல் காப்பாளர்கள், 6 பின்கள வீரர்கள், 8 மத்தியகள வீரர்கள் மற்றும் 3 முன்கள வீரர்கள் என பயிற்றுவிப்பாளரால் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அணியில் வட மாகாணத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதில், வென்னப்புவ நியு யங்ஸ் கால்பந்துக் கழகத்திற்காக சுமார் 10 வருடங்கள் ஆடிவரும் பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் தேசிய அணியின் முக்கிய வீரராக உள்ளார். இவர், லிதுவேனிய அணியுடனான மோதலில் இலங்கை அணிக்காக பின்களத்தில் மிகவும் சிறந்த முறையில் பங்காற்றிய முக்கிய வீரராக இருந்தார்.

அதேபோன்று, கொழும்பு ரினௌன் அணியில் புதிதாக இணைந்த, யாழ்ப்பாணம் சென் மேரிஸ் அணி வீரரான மரியதாஸ் நிதர்சன் மற்றும் ரினௌன் அணியில் அண்மையில் இணைந்த மற்றைய வீரரான 20 வயதையுடைய ஜூட் சுபன் ஆகியோர் வட மாகாணத்தின் அடுத்த இரண்டு வீரர்களாக உள்ளனர்.

அதேபோன்று, லிதுவேனிய அணியுடனான போட்டிக்கான குழாமில் பெயரிடப்பட்டிருந்த கிழக்கு மாகாண வீரரான மொஹமட் முஸ்தாக் SAFF கிண்ண தொடருக்கான குழாமில் உள்வாங்கப்படவில்லை.

சாப் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் மாலைதீவுகளுடன் மோதவுள்ள இலங்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) சாப் சுசுகி…

இலங்கை குழாம்

முன்கள வீரர்கள்

மொஹமட் பசால் (கொழும்பு கா.க) – சர்வான் ஜோஹர் (கொழும்பு கா.க) – அசேல மதுஷான் (ரினௌன் வி.க)

மத்தியகள வீரர்கள்

சஜித் குமார (இராணுவப்படை வி.க) – மொஹமட் ரிப்னாஸ் (கொழும்பு கா.க) –  மரியதாஸ் நிதர்சன் (ரினௌன் வி.க) – சசன்க ஜயசேகர (ரட்னடம் வி.க)  – அபீல் மொஹமட் (கொழும்பு கா.க) – கவிது இஷான் (விமானப்படை வி.க) – அசிகுர் ரஹ்மான் (இராணுவப்படை வி.க)  – டிலான் கௌஷல்ய (கொழும்பு கா.க)

பின்கள வீரர்கள்

சுபாஷ் மதுசான் (அணித் தலைவர், கடற்படை வி.க) – ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு கா.க) –  டக்சன் பியுஸ்லஸ் (நியு யங்ஸ் கா.க) – ஜூட் சுபன் (ரினௌன் வி.க) –  அநுருத்த வரகாகொட (இராணுவப்படை வி.க)  – ஹர்ஷ பெர்னாண்டோ (விமானப்படை வி.க)

கோல் காப்பாளர்கள்

சுஜான் பெரேரா (ஈகல்ஸ் விளையாட்டுக் கழகம், மாலைத்தீவுகள்) – தனுஷ்க ராஜபக்ஷ (நியு யங்ஸ் கா.க) – கவீஷ் பெர்னாண்டோ (கொழும்பு கா.க)

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க