கடந்த புதன்கிழமை புலாவாயோவில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியினர் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்தமையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி ICC விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்துக்குள் 5௦ ஓவர்களை வீசி முடிக்கவில்லை. உரிய நேரத்தின் முடிவில் இலங்கை அணி இரண்டு ஓவர்கள் வீசுவதற்கு மீதமிருந்ததால் சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளுக்கமைய ஜவகல் ஸ்ரீநாத் தலைமையிலான உயரிய நடுவர் குழாம் இந்த அபராதத்தினை விதித்துள்ளது.
ICC ஒழுக்கக் கோவை 2.5.1 விதிகளுக்கமைய வீரர்கள் மற்றும் வீரர்களை வழிநடத்தும் அணித் தலைவரும் குறித்த விதியினை மீறினால், வீரர்களுக்கு போட்டிச் சம்பளத்திலிருந்து 1௦ சதவீதமும் அணித் தலைவருக்கு 2௦ சதவீதமும் என மீதமிருந்த ஓவர்கள் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.
அதற்கமைய, அணித் தலைவருக்கு போட்டிச் சம்பளத்திலிருந்து 40 சதவீதமும் அணி வீரர்களுக்கு 2௦ சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அடுத்து வரும் 12 மாதங்களுக்குள் மீண்டுமொரு முறை உபுல் தரங்கவின் தலைமையில் குறித்த தவறு இடம்பெறுமாயின் போட்டிகளிலிருந்து தற்காலிக இடைநீக்கத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
உபுல் தரங்க குறித்த சர்வதேச விதி மீறலை ஒப்புக்கொண்டு, விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.
குறித்த விதி மீறல் தொடர்பாக ஆடுகள நடுவர் ரிச்சர்ட் இல்லிங்க்வோர்த், ஜெறேமியா மடிபிரி, மூன்றாவது நடுவர் மைக்கேல் கஃப் மற்றும் நான்காவது உத்தியோகபூர்வ அதிகாரி லங்க்டன் ருசா ஆகியோரால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.