இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஷேன் மெக்டெர்மொட்டுக்கு (Shane McDermot) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணியின் அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் மேற்கொண்ட PCR பரிசோதனையின் போது களத்தடுப்பு பயிற்சியாளர் மெக்டெர்மொட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தனையடுத்து அவரை தனிமைப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளெவர் மற்றும் உடற்கூற்று நிபுணர் பிரெட் ஹெரொப் (Brett Harrop) ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் மிக்கி ஆர்தர்
- மே.தீவுகள் தொடருக்கான 22 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு
- இலங்கை பயிற்றுவிப்பு குழுவில் மேலுமொரு கொவிட் தொற்றாளர்
இதேவேளை, இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் தேசிய அணியுடன் காலியில் அண்மைய நாட்களில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதும் எந்த ஒரு வீரர்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட் சபை மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறினார்.
இலங்கையின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும், ஊழியர்களும் கொரோனாவுக்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதனால் முதல் டெஸ்ட் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இதர பயிற்சியாளர்கள் மூவருக்கும் இன்றைய தினம் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்குமுன் கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து இலங்கை அணி நாடு திரும்பிய போது, அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேண்ட் பிளெவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<