அவிஷ்க தரிந்துவின் கன்னி முதல்தர சதம் மற்றும் அணித்தலைவர் நிபுன் தனன்ஜயவின் தொடர்ச்சியான 2ஆவது அரைச்சதத்தின் மூலம் சர்ரே கிரிக்கெட் அணியுடன் நடைபெற்ற மூன்றாவது நான்கு நாட்கள் போட்டியை இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி சமநிலையில் முடித்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி, நான்கு நாட்கள் கொண்ட மூன்று போட்டிகளிலும், மூன்று T20 போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்கும், சர்ரே கிரிக்கெட் கழக அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டி கடந்த 20ஆம் திகதி இங்கிலாந்தின் கில்பர்ட்டில் ஆரம்பமாகியது.
சர்ரே அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, நிபுன் தனன்ஜயவின் அபார சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட் இழப்பிற்கு 372 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
சர்ரே அணியின் பந்துவீச்சு சார்பில் டொம் லோவ்ஸ் மற்றும் அமர் வெர்டி ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சர்ரே கிரிக்கெட் அணி, ரையன் பட்டேல் (126 ஓட்டங்கள்), பென் கெடஸ் (104 ஓட்டங்கள்) ஆகிய இருவரினதும் சதங்கள் மற்றும் கஸ் எட்கின்ஸன், நீகோ ரீபர் ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 556 ஓட்டங்களைக் குவித்தது.
- தனன்ஜயவின் அரைச்சதத்துடன் இலங்கை வீரர்கள் முன்னிலை
- சர்ரே அணிக்கு எதிராக சதமடித்த நிபுன் தனன்ஜய
- சர்ரே அணியை பந்துவீச்சில் மிரட்டிய துனித் வெல்லாலகே
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 143 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல்தரப் போட்டிகளில் துனித் வெல்லாலகேவின் 2ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.
அத்துடன், நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் அம்ஷி டி சில்வா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தினார்கள்.
இந்த நிலையில், போட்டியின் நான்காவதும், கடைசியும் நாளான நேற்றைய தினம் (23) 184 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 290 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வந்தது. இதனால், போட்டியும் சமநிலை அடைந்தது.
இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய 20 வயது இளம் சகலதுறை வீரரான அவிஷ்க தரிந்து சதம் கடந்து 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள, முதல் இன்னிங்ஸில் சதம் கடந்து 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அணித்தலைவர் நிபுன் தனன்ஜய, இரண்டாவது இன்னிங்ஸில் 81 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார்.
சர்ரே அணியின் பந்துவீச்சில் பிரெட் ஹுட்டன் மற்றும் கஸ் எட்கின்ஸன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதன்படி, முன்னதாக நடைபெற்ற கென்ட் மற்றும் ஹெம்ஷையர் கழகங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் போட்டியையும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி சமநிலையில் நிறைவ செய்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை வளர்ந்துவரும் அணி அடுத்து 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது T20 போட்டியில் சர்ரே கிரிக்கெட் அணியை லண்டன் ஓவல் மைதானத்தில் சந்திக்கவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 372/9d (102) – நிபுன் தனன்ஞய 150, அவிஷ்க தரிந்து 48, துனித் வெல்லாலகே 46, டொம் லோவ்ஸ் 3/34, அமர் வெர்டி 3/67
சர்ரே அணி – 556/10 (164.3) – ரையன் பட்டேல் 126, பென் கெடஸ் 104, கஸ் எட்கின்ஸன் 91, நீகோ ரீபர் 68, ஜேமீ ஸ்மித் 45, துனித் வெல்லாலகே 5/143, நுவனிந்து பெர்னாண்டோ 2/78, அம்ஷி டி சில்வா 2/124
இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 290/6 (66.2) – அவிஷ்க தரிந்து 103*, நிபுன் தனன்ஜய 81, லசித் க்ரூஸ்புள்ளே 49, பிரெட் ஹுட்டன் 2/32, கஸ் எட்கின்ஸன் 2/32
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<