இளம் வீரர் ஜோர்ஜ் பார்ட்லட்டின் அரைச்சதம், பென் க்ரீன், லீவிஸ் கோல்ட்ஸ்வெர்தி மற்றும் மேக்ஸ் வொல்லர் ஆகியோரது அபார பந்துவீச்சு ஆகியவற்றால் இங்கிலாந்தின் டவுண்டனில் நேற்று (27) நடைபெற்ற 2ஆவது T20 போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியை 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சமர்செட் கிரிக்கெட் அணி தோற்கடித்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி, நான்கு நாட்கள் கொண்ட மூன்று போட்டிகளிலும், மூன்று T20 போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.
முன்னதாக கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற சர்ரே கிரிக்கெட் அணியுடனான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் இந்தப் போட்டியில் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தவைவர் தனன்ஜய லக்ஷான் சமர்செட் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.
- சர்ரே அணியுடனான முதல் T20 போட்டியில் இலங்கைக்கு தோல்வி
- இலகு வெற்றியுடன் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை
- டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறிய இலங்கை
சமர்செட் அணியின் தலைவராக பென் க்ரீன் செயல்பட்டிருந்ததுடன், அந்த அணியில் இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாடிய டொம் பென்டன் மற்றும் தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் மேர்சன்ட் டி லேங் ஆகிய வீரர்கள் விளையாடியிருந்தனர்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சமர்செட் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 194 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் பார்ட்லட் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும், ஜேம்ஸ் ருவ் 47 ஓட்டங்களையும், டொம் பென்டன் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மனெல்கர் டி சில்வா மற்றும் அஷைன் டேனியல் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
195 என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து, 66 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணிக்காக அஷேன் பண்டார 38 ஓட்டங்களையும், நுவனிந்து பெர்னாண்டோ 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, சமர்செட் அணியை பொருத்தவரை, பென் க்ரீன் மற்றும் லீவிஸ் கோல்ட்ஸ்வெர்தி ஆகிய தலா 3 விக்கெட்டுகளையும், மேக்ஸ் வொல்லர் 2 விக்கெட்டுகளையும் வீழ்திதியிருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – க்ளொஸ்டெர்ஷெயர் அணிகள் இடையிலான 3ஆவது T20 போட்டி நாளை (29) பிரிஸ்டலில் நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
சமர்செட் கிரிக்கெட் அணி – 194/4 (20) – ஜோர்ஜ் பார்ட்லட் 84*, ஜேம்ஸ் ருவ் 47, டொம் பென்டன் 34, துனித் வெல்லாலகே 2/32, மனெல்கர் டி சில்வா 1/23, அஷைன் டேனியல் 1/27
இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 128/10 (17.3) – அஷேன் பண்டார 38, நுவனிந்து பெர்னாண்டோ 21, நிபுன் தனன்ஜய 14, பென் க்ரீன் 3/25, லீவிஸ் கோல்ட்ஸ்வெர்தி 3/28, மேக்ஸ் வொல்லர் 2/15
முடிவு – சமர்செட் அணி 66 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<