இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி மற்றும் ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (14) நிறைவுக்குவந்தது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி 281 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான நேற்று (14) தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஹெம்ஷையர் அணியை பொருத்தவரை, டிலும் சுதீர வீசிய முதல் ஓவரில் ஜோன் டெர்னர் ஓட்டம் எதுவுமின்றி வெளியேறினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த ப்ளெட்சா மிட்ல்டன் மற்றும் டொம் பிரெஸ்ட் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்காக இருவரும் 58 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், டொம் பிரெஸ்ட் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அணித்தலைவர் பீளிக்ஸ் ஓகன் உதித் மதுஷானின் பந்துவீச்சில் ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழந்தார்.
- முதல் நாளில் ஹெம்ஷையர் அணிக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்
- இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த இலங்கையின் இளம் வீரர்
- இங்கிலாந்தில் அசத்தும் இளம் துடுப்பாட்ட வீரர்கள்
நான்காவது விக்கெட்டுக்காக ப்ளெட்சா மிட்ல்டன் மற்றும் டொபி எல்பர்ட் ஜோடி ஆகியோர் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ஓட்டங்களை சேர்த்தனர். இதில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய 20 வயது இளம் வீரரான ப்ளெட்சா மிட்ல்டன் அரைச்சதம் கடந்து 126 பந்துகளில் 64 ஓட்டங்களுடனும், எனொரின் டொனல்ட் 16 ஓட்டங்களுடனும் தனன்ஞய லக்ஷானின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து டொபி எல்பர்ட்டுடன் ஜோடி சேர்ந்த ரோஸ் வைட்லி இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.
குறித்த இரண்டு வீரர்களினதும் அரைச் சதங்களின் உதவியோடு ஹெம்ஷையர் அணி, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 91 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை எடுத்தது.
ஹெம்ஷையர் அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய 20 வயதுடைய இளம் வீரரான டொபி எல்பர்ட் 69 ஓட்டங்களையும், ரொஸ் வைட்லி 55 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உளளனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், தனன்ஞய லக்ஷான் மற்றும் உதித் மதுஷான் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
எனவே, ஹெம்ஷையர் அணி, இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 29 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (15) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி – 281 (86.1) – சந்துஷ் குணதிலக்க 53, நுவனிது பெர்னாண்டோ 52, துனித் வெல்லாலகே 44, டிலும் சுதீர 33, ஜோன் டேனர் 31/5, ஹெரி பெட்ரி 48/3
ஹெம்ஷையர் அணி – 252/5 (91) – டொபி எல்பர்ட் 69*, ப்ளெட்சா மிட்ல்டன் 64, ரோஸ் வைட்லி 55*, டொம் ப்ரெஸ்ட் 35, தனன்ஞய லக்ஷான் 2/43, உதித் மதுஷான் 2/73, டிலும் சுதீர 1/40
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<