சர்ரே அணியுடனான முதல் T20 போட்டியில் இலங்கைக்கு தோல்வி

Sri Lanka Emerging Team Tour of England 2022

1646

ரீஸ் டொப்லி, ஜேமி ஒவர்டன் மற்றும் சாம் ஆகியோரது அபார பந்துவீச்சு மற்றும் வில் ஜக்ஸ், ஒல்லி போப் ஆகியோரது அதிரடி துடுப்பாட்டத்தால் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் சர்ரே கிரிக்கெட் அணி வெற்றியீட்டியது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி, நான்கு நாட்கள் கொண்ட மூன்று போட்டிகளிலும், மூன்று T20 போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.

முன்னதாக கென்ட், ஹெம்ஷையர் மற்றும் சர்ரே கழகங்களுடன் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்கும், சர்ரே கிரிக்கெட் கழக அணிக்கும் இடையிலான முதல் T20 போட்டி இங்கிலாந்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சர்ரே அணித் தலைவர் கிறிஸ் ஜோர்டன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 106 ஓட்டங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கையின் துடுப்பாட்டம் சார்பில் அஷேன் பண்டார 33 ஓட்டங்களையும், அணித் தலைவர் தனன்ஜய லக்ஷான் 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று வலுச்சேர்க்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சர்ரே கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் ரீஸ் டொப்லி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜேமி ஒவர்டன் மற்றும் சாம் கரண் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 107 என்ற இலகுவான ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய சர்ரே அணிக்காக முதல் விக்கெட்டில் ஜேசன் ரோய்யும், வில் ஜக்ஸும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜேசன் ரோய், உதித் மதுஷானின் பந்துவீச்சில் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வில் ஜக்ஸுடன் ஜோடி சேர்ந்த ஒல்லி பொப் இரண்டாவது விக்கெட்டில் 93 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பகிர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

சர்ரே அணியின் துடுப்பாட்டத்தில் வில் ஜக்ஸ் அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களையும், ஒல்லி போப் 31 ஓட்டங்களையும். எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் சர்ரே கிரிக்கெட் அணி 9.4 ஒவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் உதித் மதுஷான் மாத்திரம் ஒரு விக்கெட்டினை வீழ்திதனார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, நாளை (27) சமரெஸ்ட் கழகத்துடன் இரண்டாவது T20 போட்டியில் விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி – 106/10 (18.5) – அஷேன் பண்டார 33, தனன்ஜய லக்ஷான் 27, ரீஸ் டொப்லி 3/13, ஜேமி ஒவர்டன் 2/8, சாம் கரண் 2/21

சர்ரே கிரிக்கெட் அணி – 111/1 (9.4) – வில் ஜக்ஸ் 58*, ஒல்லி போப் 31*, உதித் மதுஷான் 1/37

முடிவு – சர்ரே கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<