ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை

1746

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு எட்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.

இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு என்ன நடந்தது?

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி சார்பாக பல்வேறுபட்ட திறமைகள்…

சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக, 88 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாம் இடத்தினைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றிகள் மூலம் 5 மேலதிக புள்ளிகளைப் பெற்றது.

இதன் காரணமாக, தற்போது இலங்கை அணி பெற்றுள்ள 93 புள்ளிகளுடன் பாகிஸ்தான் சமநிலையில் இருக்கின்றது. எனினும், புள்ளிகளினை தசம அடிப்படையில் நோக்குமிடத்து பாகிஸ்தான் அணி இலங்கையை விட முன்னிலை  பெற்றிருப்பதனால், அவ்வணி ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  

சம்பியன்ஸ் கிண்ணம் இடம்பெறுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலிலும் இலங்கை அணி 93 புள்ளிகளைப் பெற்றிருந்தமை நினைவுகூறத்தக்கது.  

அதேபோன்று, நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சித் தோல்வியைக் கொடுத்து சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு உள்நுழைந்திருந்த பங்களாதேஷ் அணி, தற்போதைய தரவரிசைப் பட்டியலில் 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தினை பெற்றிருக்கின்றது.

ஏபி.டி.வில்லியர்ஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி இப்பட்டியலில் 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது. இருந்தபோதிலும் தென்னாபிரிக்க அணி இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரினை பறிகொடுத்த காரணத்தினாலும், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட தோல்விகள் காரணமாகவும் முன்னரான தரவரிசைப் பட்டியலுடன் ஒப்பிடும் போது 3 புள்ளிகளை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத தெரிவாகியிருக்கும் இந்திய அணி, ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில், 118 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

உலகக் கிண்ண நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலிய அணி 117 புள்ளிகளுடன் இவ் அட்டவணையில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளதுடன், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் காணப்படுகின்றது.  

ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரொன்றில் தற்போது பங்கேற்று முடித்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியானது இலங்கை அணியினை விட 16 புள்ளிகள் குறைவாக காணப்படுவதனால் தரவரிசைப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தினை பெற்றிருக்கின்றது.  

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி காணப்படும் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலானது, அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதியான அணிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்குரிய இறுதிப் பட்டியலாக இருக்கும். குறித்த நாளில் ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணியுடன் சேர்த்து முதல் 7 இடங்களைப் பெற்றிருக்கும் அணிகளே (மொத்தம் 8 அணிகள்) அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தெரிவாகும்.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கை அணி தரப்படுத்தலில் பின்னடைவை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 >> மேலும் பல செய்திகளைப் படிக்க <<