இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியானது, பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணியானது இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த தொடரில் விளையாடவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
முதல்தர ஒருநாள் போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு
இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சம்மேளனம் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளதுடன், தொடரில் பங்கேற்கவுள்ள 16 வீரர்கள் கொண்ட குழாத்தையும் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி இறுதியாக 2017ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மீண்டும் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது.
இலங்கை செவிப்புலனற்றோர் அணி கடந்த 2018ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை வெற்றிக்கொண்டதன் பின்னர், ஒரேயொரு தொடரில் மாத்திரமே இதுவரையில் விளையாடியுள்ளது. இறுதியாக 2020ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டிகளில் விளையாடியிருந்தது.
இந்த தொடரானது இவ்வருடம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ணத்துக்கான தயார்படுத்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவிப்புலனற்றோருக்கான உலகக்கிண்ணம் 2020ம் ஆண்டு நடைபெறவிருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தொடர் இவ்வருடம் நடைபெறும் என கூறப்படுகின்ற நிலையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இலங்கை செவிப்புலனற்றோர் அணியின் நீண்ட நாள் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த ஜயலத் அபோன்சு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக உசாந்த குணரத்ன செயற்படவுள்ளார். உதவி பயிற்றுவிப்பாளராக முன்னாள் அணித்தலைவர் ஹேமஜித் செயற்படவுள்ளார்.
வரலாற்று தொடர் வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி!
இலங்கை செவிப்புலனற்றோர் அணிக்கு முதல் உலகக்கிண்ணத்தை வென்றுக்கொடுத்த அணித்தலைவர் கிமாடு எல். மெல்கம் இந்த தொடரிலும் அணியின் தலைவராக செயற்படவுள்ளதுடன், உப தலைவராக ராஜித அசங்க செயற்படவுள்ளார்.
இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் குழாம்
கிமாடு எல். மெல்கம் (தலைவர்), ராஜித அசங்க, தாரக சம்பத், லக்ஷான் பெர்னாண்டோ, சுமது லங்கா, கொயும் ஷானக வெலகம, அசங்க மஞ்சுல, உதய லக்மால், எலின்ரோஷ் கலீப், தரிந்து விமலவீர, தினுக சச்சின், சாமர டில்ஷான், நதுன் சமீர, எஸ்.மதுசங்க, பி.தர்மசீலன்
போட்டி அட்டவணை
முதல் T20 போட்டி | ஜூலை 04 | ஹம்பாந்தோட்டை |
2வது T20 போட்டி | ஜூலை 05 | ஹம்பாந்தோட்டை |
முதல் ஒருநாள் போட்டி | ஜூலை 06 | ஹம்பாந்தோட்டை |
2வது ஒருநாள் போட்டி | ஜூலை 08 | ஹம்பாந்தோட்டை |
3வது ஒருநாள் போட்டி | ஜூலை 09 | ஹம்பாந்தோட்டை |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<