இங்கிலாந்து தொடரையடுத்து இலங்கை வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தம்

1187
Sri Lanka cricketers to sign annual contracts

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கு பின்னர் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிவருகின்றது. இந்தப் போட்டித் தொடரில் முதல் போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், தென்னாபிரிக்க அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

>> இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்த தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க தொடரையடுத்து, இங்கிலாந்து அணி, இலங்கை வரவுள்ளதுடன், 14-26ம் திகதிகள் வரை, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. குறித்த இந்த தொடர் நிறைவடைந்த பின்னர், இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணியானது, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

“வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தை ஜனவரியின் இறுதிப்பகுதியில் வழங்கவேண்டும். வீரர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மாதம் நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்காக ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, இங்கிலாந்து தொடரையடுத்து, வீரர்கள் வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவர்.

புதிய ஒப்பந்தத்திற்காக வீரர்களை இதுவரை வகைப்படுத்தவில்லை. நாம், கடந்த வருடத்தை மீண்டும் பார்க்கவேண்டும். கடந்த ஆண்டு 30 வீரர்களை இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இணைத்திருந்தோம்” என்றார்.

தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர்களுக்காக, கொவிட்-19 வைரஸ் காரணமாக 21 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<