இந்த ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை குறித்த மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்தக் மாநாட்டில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா, பசிபிக் மற்றும் ஐரோப்பா ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய, உலகம் முழுவதும் உள்ள 108 ஐசிசி உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் பங்குதாரர்களின் மிகப் பிரதான கூட்டமாக ஐசிசி வருடாந்த மாநாடு விளங்குகின்றது. இதில் கிரிக்கெட் விளையாட்டின் மூலோபாய திசை, நிர்வாகம் மற்றும் உலகளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி பற்றிய முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இம்முறை மாநாட்டில் ‘ஒலிம்பிக் வாய்ப்பைப் பயன்படுத்துதல்‘ என்ற தலைப்பில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் விளையாட்டு, மற்றும் 2028 லொஸ் ஏஞ்சல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டின் வெற்றிகரமான வருவாய்‘ போன்ற தலைப்புகள் விவாதிக்கப்படும்.
- ஐசிசி இன் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்
- தம்புள்ளையில் ஆரம்பமாகும் மகளிர் ஆசியக்கிண்ணம்!
- மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!
இந்த நிலையில், இம்முறை ஐசிசி வருடாந்த மாநாடு இலங்கையில் நடைபெறுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையைப் பொறுத்தமட்டில் இது ஒரு முக்கிய தருணமாகும். உலகம் முழுவதிலுமிருந்து வருகைதரும் பிரதிநிதிகளை எங்கள் அழகிய தீவுக்கு நாங்கள் அன்புடன் வரவேற்க விரும்புகிறோம். எதிர்கால கிரிக்கெட்டிற்கு பங்களிப்பு செய்யவும், எமது நாட்டின் அழகையும் பாரம்பரியத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தவும் இந்த மாநாட்டைப் பயன்படுத்த விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடாந்த மாநாட்டின் அங்கமாக முக்கிய கூட்டங்கள், செயலமர்வுகள், மற்றும் வலையமைப்பு அமர்வுகள் என்பன நடைபெறும். அத்துடன் விளையாட்டின் (கிரிக்கெட்) எதிர்கால நலனுக்காக மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<