இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் ஜொன்டி ரோட்ஸ், பரத்

428

உள்ளூர் பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கூற்று நிபுணர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு உயர்மட்ட பயிற்சிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் சிலரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, உலகின் தலைசிறந்த களத்தடுப்பு பயிற்சியாளரான தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ், இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் உடற்கூற்று நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) அலெக்ஸ் கொண்டோரி ஆகியோரது சேவைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (18) இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் நிகழ்ச்சித் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், குறித்த மூவரும் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணத்துவப் பயிற்றுவிப்பாளர்களின் பயிற்சிகளை அவ்வப்போது வழங்குவதன் மூலம் இந்நாட்டிலுள்ள பயிற்சியாளர்களின் திறன்களையும், திறமைகளையும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட்டில் தனக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை எனவும், குறித்த செய்தியை தான் மறுப்பதாகவும்   தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ், தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளம் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி அவர் வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>> press release document <<

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<