பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு SLC நிதியுதவி

85

கொவிட்-19 வைரஸின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு, இலங்கை பாடசாலை கிரிக்கெட் அணிகளின் பயிற்றுவிப்பாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபாவை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.  

கொரோனாவினால் இலங்கை – இந்தியா தொடர் ரத்தாகுமா?

பாடசாலை கிரிக்கெட் அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் சார்பில், இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய, இந்த நிதியினை வழங்குவதற்கு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் தேசிய ரீதியில் பாடசாலை அணிகளுக்கு பயிற்றுவிக்கும் 225 பயிற்றுவிப்பாளர்களுக்கு இந்த 20 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. “பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிடம் இருந்து எமக்கு பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு உதவி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் நாம் ஆலோசனை மேற்கொண்டு, இந்த நிதியினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்” என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் மற்றும் பாடசாலைகளின் விடுமுறைகள் காரணமாக பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களின் மாதாந்த வருமானம் பாதிக்கப்பட்டிருந்ததாக கடந்த காலங்களில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது. இதனையடுத்து பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கான சங்கமானது, கல்வியமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு தங்களுடைய வருமானம் குறித்து கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் சபை, பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு மாதாந்தம் 20 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளது. 

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஹோமாகமவில் அமைக்கவுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்துக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<