விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் வழிகாட்டலில் இலங்கை ICC முழு அங்கத்துவத்தை பெற்றது தொடக்கம் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 49 முன்னாள் வீரர்களை கௌரவிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கிய சேவைக்காகவே இவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதன்படி தற்போது இலங்கையில் வாழும் 65 வயதுக்கு மேற்பட்ட 12 கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு ஒன்றை வழங்கவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) குறிப்பிட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆண்டு நீடிக்கும் வகையில் மாதாந்தம் 25,000 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு ஒன்று வழங்கப்படவுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தின் விருப்பத்தின்படி இந்த கொடுப்பனவு ஓர் ஆண்டுக்குப் பின் புதுப்பிக்கப்படும்.
உபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் சம்பியன் கிண்ணத்தை வென்றது கொழும்பு
இதற்கு மேலதிகமாக, அவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக ஆண்டுக்கு 150,000 வரை வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெற அசல் மருத்துவக் கட்டணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த கொடுப்பனவுகளுக்கு உள்ளடக்கப்படவில்லை என்பதோடு மரணத்திற்கு பின் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை.
இதேவேளை, இலங்கையின் டெஸ்ட் அந்தஸ்த்துக்கு முன்னர் இலங்கைக்காக விளையாடிய 49 முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு 25,000 ரூபா பெறுமதியான ஞாபகச் சின்னம் ஒன்று வழங்கப்படவுள்ளது.
இந்த பிரிவுகளுக்கு உட்படாத சிறப்பு பிரிவிற்குள் உட்படும் எந்த ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரரதும் பரிந்துரை கருத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று நல நிதியின் கீழ் கொடுப்பனவை பெற்றிருக்கும் எந்த ஒரு முன்னாள் வீரரும் இந்த திட்டத்திற்கு உட்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த வாரத்தில் அமுலாகும் வகையில் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலில் இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவால் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<