இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மூன்று பேருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன, எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (05) ஆரம்பமாகவுள்ள முதலாவது டி-20 தொடருக்கு முன் லாஹூரில் வைத்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கை டி-20 அணியில் திருப்பம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடும் தசுன் சானக்க
லசித் மாலிங்கவின் ஆலோசனைகளுடன் அணியை வழி நடத்துவது எனக்கு இலகுவாக…
இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். தேசிய அணியின் தற்போதைய பயிற்சியாளராக உள்ள சந்திக்க ஹத்துருசிங்க தொடர்பில் பிரச்சினை உள்ளது. அந்தப் பிரச்சினையை ஒருபுறத்தில் வைத்துவிட்டு புதிய பயிற்சியாளர் ஒருவரை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன் நியமிக்க நடவடிக்கை எடுப்போம்.
தற்போது 3 பயிற்சியாளர்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அவர்களது பெயர்களை இப்போது அறிவிக்க முடியாது என தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறுகின்ற உள்ளுர் முதல்தர போட்டிகளில் 24 கழங்கள் விளையாடுவதை குறைப்பதற்கு தான் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பினை வெளியிடுவதாக குறிப்பிட்ட அவர், Tier A போட்டித் தொடரில் பங்குபற்றுகின்ற அணிகளை 10 ஆக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையில் முதல்தரப் போட்டிகளில் 24 அணிகள் பங்குபற்றுவதற்கு பலர் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். உண்மையில் அதற்கு நான் எதிர்ப்பினை தெரிவிக்கிறேன். கிரிக்கெட் கழகங்களை குறைப்பதால் போட்டித் தன்மையை அதிகரிக்கலாம் என்ற விடயத்தை மாத்திரம் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இதனால் Tier A போட்டித் தொடரில் பங்குபற்றுகின்ற அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனால் Tier B போட்டித் தொடரில் 14 அணிகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இதேவேளை, இலங்கையிலும் ஐ.பி.எல் போட்டித் தொடரைப் போன்ற லீக் தொடரொன்றை ஆரம்பிப்பது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்த வாணிபமயமான உலகில் இலாபமீட்டுகின்ற போட்டித் தொடரொன்றை நடத்துவது மிகவும் முக்கியம்.
ஆனால் அந்தத் தொடரில் பங்கேற்கின்ற வீரர்கள் டெஸ்ட் விளையாட்டில் இருந்து ஒதுங்கிவிட்டு டி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதற்கு தயாராகுவார்கள். அங்கு அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்.
உண்மையில் இலங்கையில் இவ்வாறான போட்டித் தொடரொன்றை நடத்துவது முக்கியம். ஆனாலும், ப்ரீமியர் லீக் தொடரொன்றை ஆரம்பிப்பது இலகுவான விடயமல்ல. இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன் எஸ்.எல்.பி.எல் ஆரம்பித்தோம். ஆனால் ஒரு வருடத்துடன் அந்தப் போட்டி கைவிடப்பட்டது. போட்டி ஏற்பாட்டாளர் வழக்கு தொடர்ந்தனர்.
எனவே இந்த முறை சரியான திட்டத்துடன் போட்டித் தொடரை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<