எதிர்வரும் அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகளை கொண்ட டி20 போட்டி தொடருக்கு இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க பெயரிடப்பட்டுள்ளார். அதே நேரம் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் தென்னாபிரிக்க அணியுடனான இறுதி டி20 போட்டியை தலைமை ஏற்று வழிநடத்தியிருந்த தினேஷ் சந்திமால் உள்ளடங்கலாக தனஞ்சய டி சில்வா மற்றும் திக்ஷீலா டி சில்வா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்சுக்கு பதிலாக தலைமை பொறுப்பெடுத்து அணியை வழி நடத்தும் உபுல் தரங்க முதல் தடவையாக டி20 போட்டிகளுக்கு தலைமை தாங்கவுள்ளார்.
மேலும், முழங்ககால் மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக சர்வதேச போட்டிகளிலிருந்து ஒரு வருடமாக விலகியிருந்த லசித் மாலிங்க முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இறுதியாக, இவர் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியளார்களுடனான சந்திப்பின் போது பேசிய லசித் மாலிங்க “மீண்டும் உடல் தகுதியை பெற்றுக்கொள்வதற்காக நான், கடந்த நான்கு மாதங்களாக குறிப்பிட்ட திட்டதுக்கமைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள பயற்சி போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தி 11 பேர் கொண்ட இலங்கை அணிக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன்” என்று தெரிவித்தார்.
அதேநேரம், முன்வரிசை அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்ஷான் முனவீர, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நான்கு டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பிரபல டி20 போட்டித் தொடர்களான கரிபியன் பிரிமியர் லீக் மற்றும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் எதிரணிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்திருந்தார்.
தென்னாபிரிக்க அணியுடனான சுற்றுப்பயண தெரிவுக்கு தவறியிருந்த நிலையில், சாமர கபுகெதர, மிலிந்த சிறிவர்தன மற்றும் தசுன் சானக்க ஆகியோர், டி20 அணியில் அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டனர்.
அதேநேரம் புது வடிவம் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான T20 சர்வதேச போட்டிகள், பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி MCG, 19ஆம் திகதி கர்டினிய பார்க் ஜீலோங் மற்றும் இறுதி டி20 போட்டி 22ஆம் திகதி அடிலெய்டிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை டி20 அணி
- உபுல் தரங்க (அணித் தலைவர்)
- நிரோஷன் திக்வெல்ல
- அசேல குணரத்ன
- டில்ஷான் முனவீர
- குசல் மென்டிஸ்
- மிலிந்த சிறிவர்தன
- சசித் பத்திரன
- சாமர கபுகெதற
- சீகுகே பிரசன்ன
- நுவன் குலசேகற
- இசுறு உதான
- தசுன் சானக்க
- லக்க்ஷான் சந்தகன்
- லசித் மாலிங்க
- விக்கும் சஞ்சய