இலங்கை கிரிக்கெட் சபை ஒன்பது கிரிக்கெட் கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான தனது நிதிசார் மானியங்களை ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டுக்குரிய கணக்காய்வு அறிக்கைகளை குறித்த விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்கள் சமர்ப்பிக்க தவறியதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கும்பொழுது, ”தங்களுடைய கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் சகல விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களை அறிவுறுத்தி இருந்தோம். அத்துடன் எமது ஆண்டுப் பொதுக் கூட்டதில் பங்குபற்றுமாறும் கோரியிருந்த போதிலும், இந்த விடயங்கள் தொடர்பில் பல விளையாட்டுக் கழகங்களின் அக்கறையின்மை காரணமாகவே மானியம் தடை குறித்து தீர்மானிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் சபை விடுத்த விடயங்களை நடைமுறை படுத்த தவறியதால், படுரலிய விளையாட்டு கழகம், ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம், தென் மாகாண கிரிக்கெட் சங்கம், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், மாத்தறை மாவட்ட கிரிக்கெட் சங்கம், புத்தளம் மாவட்ட கிரிக்கெட் சங்கம், கொள்ளுப்பிட்டி விளையாட்டு கழகம், நோர்மட்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் பீட்டர்சன் லேன் விளையாட்டு கழகம் என்பவற்றிற்கான நிதி உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் திலங்க சுமதிபால மேலும் குறிப்பிடுகையில், ”ஏற்கனவே கிரிக்கெட் சபை விடுத்திருந்த அறிவிப்பின்படி, தடை செய்யப்பட விளையாட்டு கழகங்கள் தங்கள் நிர்வாக குறைபாடுகளை சீர்திருத்தம் செய்யும் வரை இந்த நிதி விநியோகத் தடை நிடித்திருக்கும். எனினும் அதுவரை, கிரிக்கெட் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்படும் போட்டிகளில் இந்த அணிகள் பங்குகொள்ள அனுமதியளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தங்களுடைய கணக்குகளை சரி செய்து, கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் வரை எவ்விதமான நிதி உதவிகளையும் தாம் அவ்வணிகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
படுரலிய விளையாட்டு கழகம் மற்றும் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகங்கள் இம்முறை பிரீமியர் லீக் A பிரிவு சுற்றுப்போட்டிகளிலும், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் இம்முறை பிரீமியர் லீக் B பிரிவு சுற்றுப்போட்டிகளிலும் பங்குபற்ற திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.