ஐக்கிய அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கெரம் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு பூரண அனுசரணை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள 6ஆவது கெரம் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு விளையாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இதன்படி, இம்முறை கெரம் உலகக் கிண்ணத்தில் மொஹமட் ஷஹீட், அனஸ் அஹமட், கவீன் நிம்னெத் பீரிஸ், தினேஷ் நிஷாந்த பெர்னாண்டோ, ஆகியோருடன் பெண் வீராங்கனைகளான ஜோசப் ரோஷிதா வடுகே, ஹிருஷி மல்ஷானி பீரிஸ், தருஷி ஹிமஹன்சிகா வீரசேகர மற்றும் தஸ்மிலா கவிந்தி ஆகியோரும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
மேலும் இலங்கை கெரம் அணியின் முகாமையாளராக ரணில் அபேசிங்க செயலப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>தேசிய கெரம் சம்பியனாக மகுடம் சூடிய சஹீட் ஹில்மி<<
இந்த நிலையில், கெரம் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை தேசிய கெரம் அணியினர் இன்று (18) பிரதமர் ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர். இதன்போது இலங்கை கெரம் அணியுடன் குழு புகைப்படத்தில் கலந்து கொண்ட பிரதமர், வீரர்களின் வெற்றிக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சுற்றுப்பயணத்திற்கான முழுமையான அனுசரனையை இலங்கை கிரிக்கட் பொறுப்பேற்றுள்ளதுடன் அதற்காக 5 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது. அதற்கமைய இலங்கை கிரிக்கெட்டின் பொருளாளர் சுஜீவ கொடலியத்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிதியுதவியினை வழங்கி வைத்தார்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<