கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கிரிக்கெட் போட்டிகள் முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், சுகாதார அறிவுரைகளுடன் மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட தயாராகுவதாக அறியக் கிடைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இறுதியாக கடந்த மார்ச் மாதம் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இலங்கை – இங்கிலாந்து அணிகள் விளையாடவிருந்த டெஸ்ட் தொடர் இரத்துச் செய்யப்பட்டதோடு, நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இதனால், இலங்கை வீரர்களின் பயிற்சிகளும் இரத்துச் செய்யப்பட்டன.
இலங்கை அணி பரிசளித்த மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகள்
இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில்……
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இம்மாதம் 11ஆம் திகதி கொழும்பு உள்ளடங்கலாக நாடு பூராகவும் உள்ள அபாய பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பை அடுத்தே இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட தயாராகுகின்றனர்.
இதேநேரம், ThePapare.com இற்கு அறியக்கிடைத்திருக்கும் தகவல்களுக்கு அமைய இலங்கை அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இம்மாதம் 15ஆம் திகதி தொடக்கம் ஒழுங்கு செய்திருப்பதாக தெரியவருகின்றது.
இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் குழாம், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உடல் ரீதியான, திறன்கள் ரீதியான போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றனர். எனவே, 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பயிற்சி முகாமில் இலங்கை வீரர்களுக்கு சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய மிகுந்த அவதானத்துடன் பயிற்சிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வழமையாக கிரிக்கெட் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் கொரோனா வைரஸ் தொற்றுதலுக்குரிய அபாய வலயத்திற்குள் இருப்பதால் வேறு இடத்திலேயே வீரர்களுக்கான பயிற்சி முகாம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படவுள்ள இலங்கை வீரர்கள் தங்களது உடலுடன் தொடர்புடைய பயிற்சிகளை ஹோட்டல் ஜிம்மிலோ அல்லது விளையாட்டு அமைச்சின் ஜிம்மிலோ மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கிரிக்கெட் திறன்களுடன் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை NCC மைதானத்திலோ அல்லது SSC மைதானத்திலோ மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
”ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் நாங்கள், எமது வேகப் பந்துவீச்சாளர்களிற்கு பயிற்சிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். அவர்களுக்கே அதிக பயிற்சிகள் தேவையாக இருக்கின்றது. எங்களுக்கு சிறிய எண்ணிக்கையிலான வீரர்களுக்கே பயிற்சிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, நாம் வேகப் பந்துவீச்சாளர்களை முதலில் மைதானத்திற்குள் எடுக்கின்றோம். நாங்கள் (கிரிக்கெட் போட்டிகளுக்காக) முழுமையாக தயாராகும் போது, இவர்களும் (வேகப் பந்துவீச்சாளர்களும்) போதிய அளவு தயாராகி இருப்பார்கள்.” என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் ”தி ஹிந்து” செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.
இந்த பயிற்சி முகாமில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீரர்கள் எப்போதும் சுகாதார அறிவுரைகளுக்கு அமைய PCR சோதனைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதோடு, சமூக இடைவெளி பேணுதலிலும் (Social Distancing) தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இந்த பயிற்சி முகாமில் முதலில் பங்கெடுக்கும் வீரர்களாக லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, சுரங்க லக்மால், கசுன் ராஜித, நுவான் பிரதீப், இசுரு உதான, தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், வீரர்களுக்கான பயிற்சிக் குழாம் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் மூலம் தலைமை தாங்கப்பட, துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் ப்ளவர், பயிற்சி முகாமையாளர் பவுல் கோரி, பயிற்சியாளர் தில்ஷான் பொன்சேக்கா மற்றும் உடற்பயிற்சியாளர் அஜந்த வத்தேகம ஆகியோரும் பயிற்சிக் குழாத்தில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சிக் குழாத்திற்கு விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் வைத்தியர் ஒருவரும் உதவியாக இருக்கவிருக்கின்றார்.
சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல
இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி 537……
தற்போது பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டிருக்கும் வீரர்கள் வெற்றிகரமாக பயிற்சிகளை பூர்த்தி செய்யும் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு தொகுதி இலங்கை வீரர்களுக்கு (குறிப்பாக துடுப்பாட்ட வீரர்களுக்கு) வேறு காலப்பகுதி ஒன்றில் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இலங்கை அணி விளையாடவிருந்த இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதால் தற்போது தயாராகும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியுடன் ஜூலை மாதம் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை கருத்திற் கொண்டே பயிற்சிகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<