இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் பிரதானியாக, அசங்க குருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணிக்கு உலக கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அசங்க குருசிங்க கடந்த வருடம் முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராகவும், தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
எனினும், இலங்கை கிரிக்கெட்டின் உயர் செயற்திறன் பிரிவின் பிரதானியாக 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய சைமன் வில்லிஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதன்படி, எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரே அவருடைய இறுதிப் போட்டித் தொடராகவும் அமையவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனவே, வெற்றிடமாகவுள்ள சைமன் வில்லிஸின் இடத்துக்கு இலங்கை அணியின் முகாமையாரான அசங்க குருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக க்ரிக் பஸ் (Cricbuzz) இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலிங்கவை மீண்டும் நிராகரித்த மும்பை இந்தியன்ஸ் அணி
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு மற்றும் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய நிக் போதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான நிக் போதாஸ், கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிரஹம் போர்ட்டின் பதவி விலகலை அடுத்து, இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்தார்.
இவரது பயிற்றுவிப்பின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றம் கண்ட இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை முதல் தடவையாக டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
எனினும், அவரது பயிற்றுவிப்பில் இலங்கை அணி 18 ஒரு நாள் போட்டிகளுக்கு முகங்கொடுத்து 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பங்குபற்றிய 7 டி20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு, இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தெரிவின் போது சந்திக்க ஹத்துருசிங்கவுடன் போட்டியிட்ட நிக் போதாஸை மீண்டும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, கடந்த 2 வருடங்களாக இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றி வந்த நிக் போதாஸ், தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
தனது இராஜினாமா குறித்து நிக் போதாஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அணியுடனான வியக்கத்தக்க இரண்டு வருடங்களின் பின்னர், ஏனைய வாய்ப்புகளை நோக்கி நான் செல்வதற்கான பொருத்தமான தருணம் இதுவென கருதுகின்றேன்.
நான் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கான வாய்ப்பை இது வழங்கும். எனக்கு இந்த விசேட வாய்ப்பை வழங்கியதற்காக இலங்கை கிரிக்கெட்டிற்கு நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.
இங்கிலாந்து, அயர்லாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாம் இதுதான்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், எனது சக பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இறுதியாக இலங்கை அணியை மிகவும் உணர்வுபூர்வமாக நேசிக்கும் இலங்கை ரசிகர்களுக்கு எனது பதவிக்காலத்தில் வழங்கிய ஆதரவிற்காக நான் நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.
இலங்கையுடன் இணைந்திருந்தமை கௌரவத்திற்கும் பெருமைக்கும் உரிய விடயம், இதன் மூலம் ஒரு பயிற்றுவிப்பாளராக கற்றுக்கொள்வதற்கும் என்னை மேம்படுத்துவதற்குமான வாய்ப்பும் மிகவும் திறமையான வீரர்களுக்கு பங்களிப்பு செய்வதற்குமான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
இதற்கு எனது இதயத்தில் எப்போதும் தனியான இடமிருக்கும் என நிக் போதாஸ் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நீண்டகாலமாக வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கு தடுமாறி வந்த இலங்கை அணி, இந்த ஆண்டில் சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் அதற்கான நல்ல அத்திரவாரத்தை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் தொடரிலிருந்து ஆரம்பித்துவிட்டது.
அதிலும் குறிப்பாக ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க பயிற்றுவிப்பு குழாமிலும் மாற்றங்கள் இடம்பெற்றன. இதில் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக திலான் சமரவீரவையும், பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக ரொமேஷ் ரத்னாயக்கவையும் நியமிக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் வெற்றிடமாகவுள்ள களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சு பதவிகளுக்கு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கும்படி ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.