2021ஆம் ஆண்டு அதன் நிறைவினை எட்டியிருக்கின்றது. இந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட்டினை பொறுத்தவரை சில பாதகங்களை வெளிப்படுத்திய ஆண்டாக இருந்த போதும் ஒட்டு மொத்தமாக நோக்கும் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு, இந்த ஆண்டில் வளர்ச்சியடைந்திருப்பதனை அவதானிக்க முடியுமாக இருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் மோதல்

அந்தவகையில் கடந்த ஆண்டில் இலங்கை கிரிக்கெட்டிற்கு நடைபெற்ற முக்கியமான விடயங்கள் குறித்து ஒரு முறை நோக்குவோம்.

சாராம்சம்

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஆண்டில் மொத்தமாக 09 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்ததோடு, அவற்றில் 03 வெற்றிகளையும், 03 சமநிலை முடிவுகளையும் காட்டி, 03 போட்டிகளில் தோல்வியினைத் தழுவியிருந்ததையும் அவதானிக்க முடியுமாக இருந்தது. அதோடு இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஆண்டில் இரண்டு டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளினை நோக்கும் போது இலங்கை அணி கடந்த ஆண்டில் 15 போட்டிகளில் ஆடியிருந்ததோடு, அதில் 04 வெற்றிகளை மாத்திரமே பதிவு செய்திருந்தது. ஒருநாள் தொடர்கள் அடிப்படையில் நோக்கும் போது இலங்கை அணி 2021ஆம் ஆண்டில் தாம் விளையாடியிருந்த ஐந்து ஒருநாள் தொடர்களில் ஒரு தொடரினை மாத்திரமே கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T20I போட்டிகளினை நோக்கும் போது இலங்கை அணி, 2021ஆம் ஆண்டில் மொத்தமாக 20 T20I போட்டிகளில் ஆடியிருந்ததோடு அதில் 08 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததோடு, 12 T20I போட்டிகளில் தோல்வியினைத் தழுவியிருந்தது. அதேவேளை ஒருநாள் போட்டிகள் போன்று கடந்த ஆண்டில் ஒரு T20I தொடரில் மாத்திரமே இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய நிகழ்வுகள் 

முன்னணி வீரர்களின் ஓய்வுகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் சிலர் ஓய்வு அறிவிக்கப்பட்ட ஆண்டாக 2021ஆம் ஆண்டு காணப்படுகின்றது. குறிப்பாக 2021ஆம் ஆண்டில் திசர பெரேரா, இசுரு உதான, ஜீவன் மெண்டிஸ், தம்மிக்க பிரசாத் மற்றும் உபுல் தரங்க போன்ற முன்னணி வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருந்ததோடு, முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

Getty Images

டர்ஹம் சம்பவம்

இலங்கை கிரிக்கெட் அணி 2021ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூவரும் உயிர்ப்பாதுகாப்பு (Bio-Bubble) விதிமுறைகளை மீறி டர்ஹம் நகரில் உலாவிய காணொளி ஒன்று வெளியாகியிருந்ததுடன் குறித்த காணொளியினை அடுத்து ஒழுக்காற்று நடவடிக்கையாக, குறித்த வீரர்கள் மூவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கு தடையும், அபாரதமும் வழங்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் இலங்கை கிரிக்கெட்டில் திருப்புமுனை ஒன்று ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியினை உருவாக்கியிருந்தது.

மிக்கி ஆத்தர் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமப் பயிற்சியாளரான மிக்கி ஆத்தர் இரண்டு வருட ஒப்பந்தத்திற்குப் பின்னர் 2021ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார். அதோடு இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் மற்றும் களத்தடுப்பு பயிற்சியாளர் ஷேன் மெக்டெர்மோட் ஆகியோரின் பயிற்சிக்காலமும் 2021ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்திருந்தது.

மஹேலவின் வருகை

கிரிக்கெட் உலகில் தற்போது இருக்கின்ற சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் மஹேல ஜயவர்தன, 2021ஆம் ஆண்டு T20I உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுப்போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயற்பட்டிருந்தார். அதன் மூலம், 2021ஆம் ஆண்டில் மஹேல ஜயவர்தன இலங்கை அணிக்காக மீண்டும் பணிபுரிவதற்கு தொடங்கியிருந்தார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மஹேல ஜயவர்தன 2022ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசக பயிற்சியாளராக செயற்படுவார் என்கிற அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றது.

இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

சாதனைகள்/அடைவுமட்டங்கள்

T20I போட்டிகளில் வனிந்து ஹஸரங்க அசத்தல்

இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய சுழல்பந்துவீச்சாளராக மாறிவருகின்ற வனிந்து ஹஸரங்க, 2021ஆம் ஆண்டில் T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியதோடு, இது நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பெற்ற நிகழ்வாகவும் பதிவாகியது.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் மொத்தமாக 36 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வனிந்து ஹஸரங்க T20I போட்டிகளில் வருடம் ஒன்றுக்கு அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதோடு வனிந்து ஹஸரங்கவே T20I போட்டிகளில் 2021ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் சாதனை செய்திருந்தார்.

இன்னும் T20I உலகக் கிண்ணத் தொடரில் ஹட்ரிக் சாதனை செய்த மூன்றாவது பந்துவீச்சாளராகவும் வனிந்து ஹஸரங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I உலகக் கிண்ண போட்டியின் மூலம் சாதனை படைத்திருந்தார்.

சங்காவின் சாதனையினை சமப்படுத்திய திமுத் கருணாரட்ன

2021ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறு தடவைகள் அரைச்சதம் பெற்ற திமுத் கருணாரட்ன, 2007ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறு தடவைகள் சதம் பெற்ற குமார் சங்கக்காரவின் சாதனையினை சமன் செய்திருந்தார். திமுத் கருணாரட்ன இந்த அரைச்சதங்களை பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றிருந்த டெஸ்ட் போட்டிகளில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வனிந்து – நிஸ்ஸங்கவின் சாதனை இணைப்பாட்டம்

2021ஆம் ஆண்டு T20I உலகக் கிண்ண குழுநிலைப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக முதல் சுற்றில் விளையாடிய இலங்கை அணிக்காக நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 123 ஓட்டங்களை வனிந்து ஹஸரங்க – பத்தும் நிஸ்ஸங்க ஜோடி பகிர்ந்தது. அத்தோடு இந்த இணைப்பாட்டம், T20I உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் நான்காம் விக்கெட்டுக்காக பெறப்பட்டிருந்த அதிகூடிய இணைப்பாட்டமாகவும் மாறியிருந்தது.

ஒருநாள் போட்டிகள் துஷ்மன்த சமீரவின் அடைவு

ஒருநாள் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராக துஷ்மன்த சமீர காணப்படுகின்றார். துஷ்மன்த சமீர 2021ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 20 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

தனிநபர் பதிவுகள்

அதிகூடிய ஓட்டங்கள்

  ஒருநாள் போட்டிகள் டெஸ்ட் போட்டிகள் T20I போட்டிகள்
வீரரின் பெயர் வனிந்து ஹஸரங்க திமுத் கருணாரட்ன பெதும் நிஸ்ஸங்க
இன்னிங்ஸ்கள் 14 13 11
ஓட்டங்கள் 356 902 302
சராசரி 27.38 69.38 27.45
50/100 3/0 3/4 3/0

அதிகூடிய விக்கெட்டுக்கள்

  ஒருநாள் போட்டிகள் டெஸ்ட் போட்டிகள் T20I போட்டிகள்
வீரரின் பெயர் துஷ்மன்த  சமீர லசித் எம்புல்தெனிய வனிந்து ஹஸரங்க
இன்னிங்ஸ்கள் 11 11 20
விக்கெட்டுக்கள் 20 32 36
சராசரி 29.30 27.21 11.63

அதிக பிடியெடுப்புக்கள்

  ஒருநாள் போட்டிகள் டெஸ்ட் போட்டிகள் T20I போட்டிகள்
வீரரின் பெயர் தனன்ஞய டி சில்வா லஹிரு திரிமான்ன தசுன் ஷானக்க
இன்னிங்ஸ்கள் 10 14 17
பிடியெடுப்புக்கள் 07 14 09

 இறுதியாக

2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியான சரிவுகளை சந்தித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஒப்பிட்டளவில் 2021ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாகவே அமைந்திருந்தது. இந்த ஆண்டில் நிறைய இளம் வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததோடு, அது இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கும் நம்பிக்கையினை கொடுத்திருந்தது. எனவே மலரவிருக்கும் 2022ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைவதற்கு வாழ்த்துகள்!

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<