கொவிட்-19 வைரஸிற்கு பின்னர் இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் முகமாக, 24 வீரர்களை கொண்ட பயிற்சி முகாம் ஒன்றினை கண்டியில் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இந்த பயிற்சி முகாமானது எதிர்வரும் 22ம் திகதி முதல் ஜூலை 2ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
“ஜொப்ரா ஆர்ச்சருடன் நட்பு இல்லை” – கெமார் ரோச்
இலங்கை கிரிக்கெட் சபை இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 12ம் திகதிவரை தமது அணிக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் ஒன்றினை 13 வீரர்களை உள்ளடக்கி (குறிப்பாக பந்துவீச்சாளர்கள்) வெற்றிகரமாக நடத்தியிருந்தது. இந்த நிலையில், மேலும் 11 வீரர்களை (அதிகமாக துடுப்பாட்ட வீரர்கள்) இணைத்து 10 நாட்களுக்கு இந்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாமை நடத்தவுள்ளது.
பயிற்சி முகாமானது கண்டி-பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், வீரர்களின் சுகாதார பாதுகாப்பிற்காக அவர்கள் கண்டியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்படவுள்ளனர். வீரர்களின் பாதுகாப்பை கருதி, வீரர்கள் ஹோட்டலில் இருந்து தனிப்பட்ட தேவைகளுக்காக மற்றும் தமக்கு தேவையான விதத்தில் மைதான பயிற்சிக்காக வெளிச்செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த பயிற்சி முகாமில் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் உட்பட, துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் ப்ளவர், உடற்பயிற்சி நிபுணர் டில்ஷான் பொன்சேகா, அஜந்த வத்தேகம மற்றும் புது வரவான களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் மனோஜ் அபேவிக்ரம மற்றும் ரொஹான் ப்ரியதர்ஸன ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.
அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் திசர பெரேரா ஆகியோருடன் முன்னணி வீரர்களாக பயிற்சியில் இடம்பெற்றுள்ளதுடன், இந்த பயிற்சி முகாமில் T20 அணித் தலைவர் லசித் மாலிங்க இடம்பெறவில்லை.
இலங்கை அணி இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்ததுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான தொடருடன் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணிக்கான சர்வதேச போட்டிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனினும், உள்ளூர் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபை, சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயிற்சி முகாமில் இணைக்கப்பட்டுள்ள வீரர்கள்
திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க, குசல் பெரேரா, ஓசத பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, டில்ருவான் பெரேரா, லக்ஷான் சந்தகன், லசித் எம்புல்தெனிய, இசுரு உதான, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, நுவான் பிரதீப்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<