ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மற்றும் அதன் நிர்வாக கூட்டமைப்பு 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் (2023 Asian Games) வென்ற இலங்கை வீர, வீராங்கனைகளை கௌரவித்திருக்கின்றது.
>> சமரி அதபத்துவை கௌரவிக்கும் சிட்னி தண்டர்ஸ்!
அந்தவகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த 11 வீர, வீராங்கனைகளும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் இருவரும் இலங்கை கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் ஊடாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பிட்ட நிகழ்வில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி ஆலோசகரான முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க பங்கேற்றதோடு, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ உட்பட இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரட்ன, வெள்ளிப் பதக்கம் வென்ற நதீஷா டில்ஹானி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ஏனைய 09 வீர, வீராங்கனைகள் என அனைவருக்கும் பணப் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தது.
>> பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹபீஸ் நியமனம்
இதில் தங்கம் வென்று இலங்கைக்கு சர்வதேசத்தில் பெருமை தேடித்தந்த தருஷி கருணாரட்னவிற்கு 10 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதோடு, வெள்ளிப் பதக்கம் வென்ற நதீஷா டில்ஹானிக்கு 5 மில்லியன் ரூபாய்களும், வெண்கலப் பதக்கம் வென்ற ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய்கள் வீதமும் இலங்கை கிரிக்கெட் சபை மூலமாக வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை பயிற்சியாளர்களுக்கும் பண வெகுமதிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதேநேரம் ஆசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் விஷேட நிகழ்வு ஒன்றின் மூலம் விரைவில் கௌரவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<