இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவரின் யாழ் விஜயத்தில் என்ன நடந்தது?

541

வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தனர். 

குறிப்பாக, வடக்கில் கிரிக்கெட் விளையாடுகின்ற ஒருசில முன்னணி பாடசாலைகளுக்கும், மண்டைத்தீவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அமையப் பெற்றுள்ள பகுதிக்கும் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர்.  

கொரோனாவிற்குப் பின்னரான பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற டிக்வெல்ல, சந்திமால், திசர

இந்த விஜயம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா கருத்து வெளியிடுகையில், 

”உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை நடத்தும் வகையில் மல்லாக்கத்தில் புற்தரை ஆடுகளத்தைக் கொண்ட கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சுமார் 20 முதல் 25 மில்லியன் ரூபா முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். 

அத்துடன், வடக்கில் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ். இந்துக் கல்லூரி, சென்ட் ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு புற்தரை ஆடுகளங்களை வழங்கவுள்ளோம். 

அதேநேரம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஏற்கனவே உள்ள புற்தரை ஆடுகளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” 

இதனிடையே, 2016இல் இலங்கை கிரிக்கெட் சபையினால் யாழ்ப்பாணம் மண்டைத்தீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 200 மில்லியன் ரூபா நிதியினை இலங்கை கிரிக்கெட் சபை ஒதுக்கியது. 

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 121

அதிலும் குறிப்பாக, அப்போதைய இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த திலங்க சுமதிபால மண்டைத்தீவுக்கு விஜயம் செய்து கிரிக்கெட் மைதானத்தை நிர்மானிக்கவுள்ள 50 ஏக்கர் நிலப்பரப்பை மேற்பார்வை செய்தார்.  

எனினும், குறித்த இரண்டு மைதானங்களினதும் நிர்மானப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 26ஆம் திகதி மண்டைத்தீவுக்கு விஜயம் செய்து அங்குள்ள தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து பார்த்தனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<