இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

1067

இலங்கை கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டில் ஆசியக் கிண்ண (T20) தொடரினை கைப்பற்றி இருந்ததோடு, அதற்கு முன்னர் அதிக பலம்மிக்க அவுஸ்திரேலிய அணியினையும் ஒருநாள் தொடர் ஒன்றில் வீழ்த்தியிருந்தது. அத்துடன் இலங்கை அணி இந்த ஆண்டில் ஒருநாள் தொடர்கள் எதனையும் பறிகொடுக்கவில்லை.

சாதனைகளை குவித்த இஷான் கிஷனின் கன்னி இரட்டைச்சதம்!

இந்த விடயங்கள் அண்மைக்கால இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டமைக்கு சான்றாக காணப்படுகின்றன. இந்த மாற்றம் உண்மையானதா என்பதனை பார்ப்பதற்கு நாம், இலங்கை அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இலக்கங்களின் (Numbers) அடிப்படையில் பார்க்க முடியும்.

2019 தொடக்கம் 2021 வரையான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி 2022ஆம் ஆண்டில் ஒருநாள் தொடர்கள் எதிலும் தோல்வி அடையவில்லை என முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இலங்கை அணி அடுத்த ஆண்டில் நியூசிலாந்துடன் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை கைப்பற்றாமல் போகும் போது, இலங்கை அணிக்கு அடுத்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு தகுதிகாண் தொடர்களில் விளையாட வேண்டிய நிலைமையும் உருவாகும்.

முன்னாள் உலகக் கிண்ணச் சம்பியன்களுக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாக தகுதிகாண் தொடர் ஒன்றில் விளையாட வேண்டிய தேவை ஏன் ஏற்பட வேண்டும்? இதற்கு இலங்கை அணி 2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரையில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தினை காரணமாக குறிப்பிடலாம்.

கொவிட் வைரஸ் காரணமாக 2020ஆம் ஆண்டில் இலங்கை அணி விளையாட வேண்டி இருந்த பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தடைப்பட்டிருந்தன. ஆனால் இலங்கை அணி அதிக கிரிக்கெட் தொடர்களில் ஆடிய 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அதன் பதிவுகள் மோசமாக அமைந்திருந்தன.

2019ஆம் ஆண்டில் இலங்கை அணியின் பதிவுகள்

போட்டி வகை போட்டிகள் வெற்றிகள் தோல்வி சமநிலை வெற்றி வீதம்
டெஸ்ட் 8 3 4 1 37.5
ஒருநாள் 21 7 14 0 33.3
T20I 13 4 8 1 34.6

அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் இலங்கை அணி 2019ஆம் ஆண்டில் மிக மோசமான பதிவுகளை காட்டியிருப்பதனை அவதானிக்கலாம். டெஸ்ட் போட்டிகளைத் தவிர இலங்கை அணி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மோசமாக செயற்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2019ஆம் ஆண்டில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளாக குசல் பெரேராவின் அசத்தல் ஆட்டத்துடன் கிடைத்த தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் வெற்றி மற்றும் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் கிடைத்த T20 தொடர் வெற்றி என்பவற்றினை குறிப்பிடலாம்.

ஆனால், ஒருநாள் போட்டிகளில் உலகக் கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்தினை வீழ்த்தியதை தவிர 2019ஆம் ஆண்டில் இலங்கை பங்களாதேஷ், ஆப்கான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து தவிர்த்து எந்த பெரிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைப் பதிவு செய்ய தவறி இருந்ததோடு நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிராக வைட்வொஷ் தொடர் தோல்விகளையும் ஒருநாள் போட்டிகளில் சந்தித்திருந்தது.

2021ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி

போட்டி வகை போட்டிகள் வெற்றிகள் தோல்வி சமநிலை வெற்றி வீதம்
டெஸ்ட் 9 3 3 3 33.3
ஒருநாள் 15 4 10 1 28.57
T20I 20 8 12 0 40

கொவிட் வைரஸின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அதிக போட்டிகளில் ஆடத் தொடங்கிய 2021ஆம் ஆண்டும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகவும் மோசமாக அமைந்திருந்தது என்றே கூற முடியும். அந்த ஆண்டில் இலங்கை பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் என்பவற்றுக்கு எதிராக மோசமான ஒருநாள் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. இந்த ஒருநாள் தொடர்கள் உலகக் கிண்ணத் தொடரின் நேரடி தகுதியினை தீர்மானிக்கும் ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்கிய காரணத்தினால் ஒருநாள் சுபர் லீக்கிற்காக கிடைக்கவிருந்த புள்ளிகளும் இலங்கை அணிக்கு இல்லாமல் போயிருந்தன.

அத்துடன் அந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இலங்கை வீரர்கள் சிலரினது ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக நடைபெற்ற சம்பவமும் இலங்கை கிரிக்கெட் அணியில் பிரளயம் ஒன்றினையே தோற்றுவித்திருந்தது. அந்த ஆண்டில் இலங்கை, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரினை தவிர்த்து விளையாடிய அனைத்து ஒருநாள் தொடர்களிலும் தோல்வியினைத் தழுவியிருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது.

2022ஆம் ஆண்டில் இலங்கை அணி

போட்டி வகை போட்டிகள் வெற்றிகள் தோல்வி சமநிலை வெற்றி வீதம்
டெஸ்ட் 8 3 4 1 37.5
ஒருநாள் 11 6 4 1 60
T20I 25 11 13 1 46

இலங்கை அணி கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது 2022ஆம் ஆண்டில் முழுமையான மாற்றத்துக்கு உள்ளாகியிருந்தது. இந்த ஆண்டில் சிரேஷ்ட வீரர்களை தவிர்த்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் தசுன் ஷானக்க நிரந்தர தலைவராகவும், டெஸ்ட் அணியின் தலைவராக திமுத் கருணாரட்னவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் இந்த ஆண்டில் கிறிஸ் சில்வர்வூட் தலைமையிலான புதிய பயிற்சியாளர் குழாமும் இலங்கை அணியினை தமது ஆளுகைக்குள் எடுத்திருந்தது.

டெஸ்ட் போட்டிகளை நோக்கும் போது 2022ஆம் ஆண்டில் இலங்கை அணி இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் மாத்திரமே தோல்வியினைத் தழுவியிருக்கின்றது. அதன் பின்னர் நடைபெற்ற பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான டெஸ்ட் தொடரினை சமநிலை செய்திருக்கின்றது.

ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கை இலகுவாக எடுத்துக்கொண்டதா இலங்கை?

அதேநேரம், ஒருநாள் போட்டிகளை நோக்கும் போது மூன்று ஒருநாள் தொடர்களில் ஆடியிருக்கும் இலங்கை அணி எந்த தொடர்களினையும் (ஒருநாள் சுபர் லீக் தொடர்கள் அடங்கலாக) இந்த ஆண்டில் பறிகொடுக்கவில்லை. இதில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பிரபலமிக்க ஒருநாள் தொடர் வெற்றியும் உள்ளடங்கும்.

மறுமுனையில் இலங்கை அணி 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை T20I போட்டிகளில் சிறந்த பதிவினைக் காட்ட தவறிய போதும் T20 போட்டிகளாக நடைபெற்ற  ஆசியக் கிண்ண தொடரினைக் கைப்பற்றி இருந்ததோடு, T20 உலகக் கிண்ணத் தொடரிலும் ஒப்பீட்டளவில் நல்ல பதிவினைக் காட்டி இருந்தது. அதாவது கடந்த ஆண்டில் இலங்கை அணி விளையாடிய இறுதி 15 T20 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

தனிப்பட்ட வீரர்களின் சாதனையினை நோக்கும் போதும் இலங்கை வீரர்கள் 2022ஆம் ஆண்டில் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டியிருக்கின்றனர். இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க இந்த ஆண்டு T20I போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (34) கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் முதல் 5 இடங்களுக்குள் காணப்படுகின்றார்.

டெஸ்ட் போட்டிகளை நோக்கும் போது இந்த ஆண்டில் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடிய பிரபாத் ஜயசூரிய இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை (29) கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் காணப்படுகின்றார்.

இவர்கள் தவிர தினேஷ் சந்திமால் இந்த ஆண்டில் 700 ஓட்டங்களுக்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் குவித்து இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட சராசரியினை (102.71) வெளிப்படுத்திய துடுப்பாட்டவீரராக காணப்படுகின்றார்.

மேலே, நாம் பார்த்த விடயங்கள் இலங்கை அணி கடந்த நான்கு வருடங்களுடன் ஒப்பிடும் போது 2022ஆம் ஆண்டில் சிறந்த பதிவுகளை வெளிப்படுத்தியிருப்பது புலனாகின்றது. இந்த சிறந்த பதிவுகள் மலரவிருக்கும் 2023ஆம் ஆண்டிலும் தொடர வேண்டும் என்பதே இலங்கை கிரிக்கெட் இரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

>> கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<