இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய மூவரையும் உடனடியாக நாடு திரும்புமாறு கட்டளை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19
முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு டர்ஹம் பிராந்தியத்தில் பொது மக்களிடையே உலாவும் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளி ஒன்று வெளியானதை அடுத்து அது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்திருந்தது.
இலங்கை வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் சந்தர்ப்பமொன்றில் இந்த காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையினை எழுப்பியதனால் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோஹன் டி சில்வா ThePapare.com இடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது விசாரணைகள் நிறைவுக்கு வந்து, மூன்று வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியே சென்றமை இனம்காணப்பட்ட நிலையில் குறித்த மூன்று கிரிக்கெட் வீரர்களையும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேற்றி அவர்களை இலங்கை கிரிக்கெட் சபை உடனடியாக நாட்டுக்கு அழைத்திருக்கின்றது.
கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்
”இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ், விக்கெட் காப்பு தடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணத்திலக்க ஆகிய மூன்று வீரர்களினையும் உடனடியாக நாடு திரும்புமாறு கட்டளையிட்டுள்ளது.” என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முகாமையாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னரே, இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் வீரர்கள் மூவரையும் நாட்டிற்கு உடனடியாக திருப்பி அழைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், குறித்த வீரர்கள் தொடர்பிலான விசரணைகள் முழுமையாக நிறைவடையும் வரையில் அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடந்து முடிந்த T20 தொடரை இலங்கை அணி 3-0 என முழுமையாக இழந்துள்ள நிலையில், அடுத்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், இலங்கை அணி இந்திய அணியுடன் சொந்த நாட்டில் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறிருப்பினும் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய வீரர்கள் இந்திய அணியுடனான தொடருக்கு இலங்கை அணியில் இணைக்கப்பட மாட்டார்கள் என்றே நம்பப்படுகின்றது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…