SLC இன் புனர்வாழ்வு திட்டத்தை புறக்கணித்த குசல் பெரேரா

1399
Sri Lanka Cricket issue clarification

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவின் தோள்பட்டை சத்திர சிகிச்சைக்கான செலவை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்க மறுத்துவிட்டதாக வெளியான செய்தி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை விளக்கமளித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஆசியக் கிண்ணம் மற்றும் ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களுக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் நீண்ட காலமாக தோள்பட்டை காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குசல் ஜனித் பெரேராவுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழுவுடன் கலந்தாலோசித்து, 12 வாரங்கள் புனர்வாழ்வு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை குசல் ஜனித் பெரேராவுக்கு எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதைத் தவிர்த்து, இலங்கை கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழுவின் மேற்பார்வையின் கீழ் உத்தேச ‘புனர்வாழ்வுத் திட்டத்தை’ மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபையின ஆலோசனைக்கு செவிசாய்ப்பதற்குப் பதிலாக, அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) பங்கேற்றார், இதனால் அவருக்கான முன்னெடுக்கப்பட்டு வந்த புனர்வாழ்வு திட்டம் பாதிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் அவர் விளையாடிய பின்னரும், இலங்கை கிரிக்கெட்டின் மருத்துவக் குழு, இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணம் மற்றும் ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை கவனம் செலுத்தி, குசல் பெரேராவுக்கு கடந்த சில மாதங்களாக புனர்வாழ்வு அளிக்க முடிவு செய்தது.

இருப்பினும், அவர் வழக்கமான புனர்வாழ்வு பணிகளில் பங்கேற்கத் தவறிவிட்டார். குறிப்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் புனர்வாழ்வுக்கான உயர் செயல்திறன் மையத்தில் அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கலந்துகொண்டார்.

எனவே, எமது புனர்வாழ்வுத் திட்டத்தில் அவருக்கு அர்ப்பணிப்பு இல்லாததால், அவரது தோள்பட்டை சத்திர சிகிச்சைக்கான செலவு விடயத்தில் முழு அர்ப்பணிப்பையும் செய்ய இலங்கை கிரிக்கெட் சபை மறுபரிசீலனை செய்ய வேண்டியதாயிற்று, ஏனெனில் அவர் ஏற்படுத்திய தாமதம், இலங்கை கிரிக்கெட் சபையின் ஒட்டுமொத்த திட்டத்திற்கு ஏற்ப ஆசியக் கிண்ணம் மற்றும் T20 உலகக் கிண்ணம் ஆகிய தொடர்களுக்கு வீரர்களை தயார்படுத்தும் திட்டத்துடன் ஒத்துப் போகவில்லை.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை குசல் ஜனித் பெரேராவிற்கு அறிவுறுத்தியதாகவும், அவரது சத்திர சிகிச்சைக்கு தேவைப்படும் செலவில் பெரும் பகுதியை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கும் என குசல் பெரேராவிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் வெளியான Sunday Times பத்திரிகையில், இலங்கை கிரிக்கெட் சபை சத்திர சிகிச்சைக்கான முழு கட்டணத்தையும் செலுத்த மறுத்துவிட்டதாகவும், காப்பீட்டின் மூலம் செலுத்தப்படாத பெரும்பாலான செலவை குசல் பெரேரா ஏற்குமாறு கூறியதாகவும் செய்தி வெளியிட்டது.

Sunday Times பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியின் படி, குசல் பெரோவின் உபாதையைக் குணப்படுத்த இலங்கை கிரிக்கெட் சபையானது காயங்களில் நிபுணத்துவம் வாய்ந்த எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணரான பிரித்தானியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ வாலஸ் என்பவருடன் கலந்தாலோசிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது குசல் பெரேரா தோள்பட்டையில் காயம் அடைந்தார், ஆனால் அதன்பிறகு தென்னாப்பிரிக்காவின் இலங்கை சுற்றுப்பயணம், கடந்த நவம்பரில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணம் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கின் 2 ஆவது அத்தியாயம் ஆகியவற்றிற்காக மீண்டும் அணிக்கு திரும்பினார். எவ்வாறாயினும், உலகக் கிண்ணத்திற்குப் பிறகு அவர் இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<