கெண்ட் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான பயிற்சிப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிக்காக விளையாடிய நிஷான் மதுஷ்க இங்கிலாந்தில் இரட்டைச்சதம் விளாசி அசத்தியுள்ளார்.
பயிற்சிப்போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (08) நிறைவுபெற்றுள்ள நிலையில், நிசான் மதுஷ்க இரட்டைச்சதம் கடக்க, லசித் குரூஸ்புள்ளே சதத்தை பதிவுசெய்தார். இவர்களுடன், நுவனிந்து பெர்னாண்டோ 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 573 ஓட்டங்களை குவித்துள்ளது.
>> இங்கிலாந்தில் அசத்தும் இளம் துடுப்பாட்ட வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 201 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் களமிறங்கியது.
இலங்கை அணிசார்பாக நேற்றைய தினம் நிசான் மதுஷ்க சதம் கடந்திருந்த நிலையில், மறுமுனையில் 86 ஓட்டங்களுடன் லசித் குரூஸ்புள்ளே துடுப்பெடுத்தாட களமிறங்கினார். இதில், லசித் குரூஸ்புள்ளே சதத்தை பெற, இவர்கள் இருவருக்கும் இடையில் சிறப்பான இணைப்பாட்டம் கட்டியெழுப்பப்பட்டது.
நிசான் மதுஷ்க மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 294 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், லசித் குரூஸ்புள்ளே 136 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் இடத்தை நிரப்புவதற்காக அழைக்கப்பட்ட நுவனிந்து பெர்னாண்டோ சிறந்த ஓட்டவேகத்தில் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார். மறுமுனையில் தன்னுடைய கன்னி முதற்தர இரட்டைச்சதத்தை நிசான் மதுஷ்க பதிவுசெய்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுகொடுத்தார்.
நுவனிந்து பெர்னாண்டோ, நிசான் மதுஷ்கவுடன் இணைந்து 171 ஓட்டங்களை பகிர்ந்த போதும், துரதிஷ்டவசமாக 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஒரு ஓட்டத்தால் சதத்தை தவறவிட்டார். நுவனிந்து பெர்னாண்டோ 108 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டார்.
நுவனிந்துவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து முச்சதத்தை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசான் மதுஷ்க 269 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஜோர்ஜ் லிண்டேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2 சிக்ஸர்கள் மற்றும் 37 பௌண்டரிகளை பெற்றிருந்தார்.
நிசான் மதுஷ்கவின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது, இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில், இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டமாக பதிவாகியது. இதற்கு முதல் அரவிந்த டி சில்வா கெண்ட் அணிக்கு எதிராக 255 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
நிசான் மதுஷ்கவுக்கு அடுத்தப்படியாக தனன்ஜய லக்ஷான் 24 ஓட்டங்களுடனும், அஷேன் பண்டார 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 573 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கெண்ட் அணியின் பந்துவீச்சில், ஜோர்ஜ் லிண்டே அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணி, கெண்ட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 22 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றன.
சுருக்கம்
கெண்ட் கிரிக்கெட் கழகம் – 595/8d (137), டெரன் ஸ்டீவன்ஸ் 168, ஜோர்ஜ் லிண்டே 107, தனன்ஜய லக்ஷான் 106/2, உதித் மதுசான் 109/2, யசிரு ரொட்ரிகோ 90/2
இலங்கை பதினொருவர் – 573/6 (131), நிசான் மதுஷ்க 269, லசித் குரூஸ்புள்ளே 136, நுவனிந்து பெர்னாண்டோ 99, ஜோர்ஜ் லிண்டே 106/2
முடிவு – கெண்ட் அணி 22 ஓட்டங்களால் முன்னிலை
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<