இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வளர்ந்துவரும் அணியின் இலங்கை அபிவிருத்தி குழாம் மற்றும் கெண்ட் கிரிக்கெட் கழகத்துக்கான பயிற்சிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்றைய தினம் நிறைவுக்குவந்தது.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கெண்ட் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முன்னணி பந்துவீச்சாளரை இழக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி
அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கெண்ட் அணி முதல் நாள் ஆட்டநேர நிறைவில் அனுபவ துடுப்பாட்ட வீரர் டெரன் ஸ்டீவன்ஸ் மற்றும் ஜோர்ஜ் லிண்டே ஆகியோரின் அற்புதமான சதங்களின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 418 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை இளையோர் அணியை பொருத்தவரை ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்கள் சற்று அழுத்தம் கொடுத்தனர். குறிப்பாக கெண்ட் அணி தங்களுடைய முதல் விக்கெட்டை 9 ஓட்டங்களுக்கு இழந்தது. பின்னர், கெண்ட் அணியின் முதல் 4 விக்கெட்டுக்களும் 95 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
இருப்பினும் டெரன் ஸ்டீவன்ஸ் மற்றும் ஜோர்ஜ் லிண்டே ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். இதில், இலங்கை இளையோர் அணியின் பந்துவீச்சு சற்று தடுமாற்றத்துக்கு உள்ளாக, இவர்கள் இருவரும் 5வது விக்கெட்டுக்காக 264 ஓட்டங்களை குவித்தனர். இதில் டெரன் ஸ்டீவன்ஸ் 168 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்ததுடன், ஜோர்ஜ் லிண்டே 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் உதித் மதுசான் மற்றும் தனன்ஜய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, யசிரு ரொட்ரிகோ மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சுருக்கம்
கெண்ட் கிரிக்கெட் கழகம் – 418/6 (90), டெரன் ஸ்டீவன்ஸ் 168, ஜோர்ஜ் லிண்டே 107, தனன்ஜய லக்ஷான் 92/2, உதித் மதுசான் 75/2
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<