இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட், ஒருநாள் துடுப்பாட்ட வீரரான நவீட் நவாஸ் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமனம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார் தனன்ஞய டி சில்வா
அந்தவகையில் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணிபுரிந்த நவீட் நவாஸ், ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கிரிக்கெட் பயிற்சியாளராக பாரிய அனுபவத்தினைக் கொண்டிருக்கும் நவீட் நவாஸ் கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் பெற்றிருந்ததோடு, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பயிற்றுவித்த அனுபவத்தினைக் கொண்டிருக்கின்றார்.
அத்துடன் நவாஸ் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் போது தனது ஆளுகையில் 2020ஆம் ஆண்டு இளையோர் உலகக் கிண்ணத்தினை முதன் முறையாக பங்களாதேஷ் அணி வெல்வதற்கும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு, இலங்கை சிரேஷ்ட கிரிக்கெட் அணிக்காக தனது பயணத்தினை ஆரம்பிக்கவுள்ள நவீட் நவாஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் கிறிஸ் சில்வர்வூடிற்கு பக்கபலமாக காணப்படுவார் என நம்பப்படுகின்றது.
தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஜோ ரூட்
இதேநேரம், இலங்கை – பங்களாதேஷ் தொடரின் போது இலங்கை அணியின் வேகப் பந்துப்பயிற்சியாளராக சமிந்த வாசும், சுழற் பந்துப்பயிற்சியாளராக பியால் விஜேதுங்கவும், களத்தடுப்பு பயிற்சியாளராக மனோஜ் அபேய்விக்ரமவும் செயற்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பங்களாதேஷ் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக மனோஜ் ஹலன்கொட காணப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக காணப்படுவதோடு இந்த தொடர் மே மாத நடுப்பகுதியில் பங்களாதேஷில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<