தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (26) அறிவித்தது.
>>மெதிவ்ஸின் உடற்தகுதி மாற்றத்துக்கான காரணம் என்ன?
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான ஷெஹான் மதுஷங்க, கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய இவர் சாதனையும் படைத்தார்.
அதேபோல, இலங்கை அணிக்காக இரண்டு டி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய ஷெஹான் மதுஷங்க, அதன்பிறகு காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.
இந்த நிலையில், குளியாப்பிட்டி – பன்னல பகுதியில் வைத்து தடை செய்யப்பட்ட போதைப் பொருளுடன் சந்தேக நபரான ஷெஹான் மதுஷங்க கடந்த 23ஆம் திகதி பன்னல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப்பின் நேற்று (25) வழக்குப் பதிவு செய்து குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷெஹான் மதுஷங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பதில் நீதிவான் இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.
இதேநேரம், ஷெஹான் மதுஷங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ஷெஹான் மதுஷங்கவின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விளையாட தடைவிதிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
>>பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு SLC நிதியுதவி
இதுதொடர்பில் இலங்கை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள ஷெஹான் மதுஷங்க தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருடைய தரப்பில் இருந்து எமக்கு இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்.
எனவே, அவர் மீதான விசாரணைகள் முடியும் வரை எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்குபற்ற முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<