இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிப்பட்டுள்ள முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸுக்கு C பிரிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மட்ட கிரிக்கெட்டில் பங்கேற்கும் வீரர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் செயல்படுத்தி வரும் திட்டங்களின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டு உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் பங்கேற்கும் 45 வீரர்களுக்கு வருடாந்த ஒப்பந்தங்களை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதைக் நோக்கமாகக் கொண்டு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவின் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு இந்த ஒப்பந்தங்களை வழங்கியது.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில், இந்த ஒப்பந்த வீரர்கள் A, B, C மற்றும் D என நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் A பிரிவில் 20 வீரர்களும் B பிரிவில் 5 வீரர்களும், C மற்றும் D பிரிவுகளில் தலா 10 வீரர்களும் இடம்பெறுகின்றனர்.
- இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா
- இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க, மேற்கிந்திய தீவுகளின் சவால்
- குஸ்தில் சாஹ் – இரசிகர்கள் மோதல் தொடர்பில் பாக். கிரிக்கெட் சபை கண்டனம்
அதேபோல, அறிவிக்கப்பட்டுள்ள இப்புதிய வருடாந்த ஒப்பந்தத்தில் ஒரேயொரு தமிழ் பேசுகின்ற வீரராக கொழும்பைச் சேர்ந்த மொஹமட் சமாஸ் C பிரிவில் இடம்பிடித்துள்ளார். கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர், இலங்கை 19 வயதின்கீழ் அணி, இலங்கை வளர்ந்துவரும் அணிக்ளுக்காக விளையாடியுள்ளார். அதேபோல, இலங்கையில் நடைபெறுகின்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் க்ளெடியேட்டர்ஸ் அணியிலும் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்றார்.
24 வயது விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸ், ஆரம்ப காலத்தில் உள்ளூர் பிரதான கழகங்களில் ஒன்றான முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்காக ஆடியதுடன், தற்போது தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றார். இதுவரை 32 முதல்தர போட்டிகள் மற்றும் 54 லிஸ்ட் A போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள இப்புதிய வருடாந்த ஒப்பந்தத்தில் நிரோஷன் டிக்வெல்ல, லக்ஷான் சந்தகென், அஷேன் பண்டார, லசித் எம்புல்தெனிய உள்ளிட்ட டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே ஆடிய பல அனுபவமுள்ள வீரர்களைப் போல, உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசித்து வருகின்ற பல இளம் வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
வருடாந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட வீரர்களின் விபரம்:
A பிரிவு: தனஞ்சய லக்ஷான், லஹிரு மதுஷங்க, நிப்புன் ரன்சிக்க, ஷெவோன் டெனியல், அஹான் விக்ரமசிங்க, நிரோஷன் டிக்வெல்ல, இசித்த விஜேசுந்தர, நிமேஷ் விமுக்தி, தரிந்து ரத்நாயக்க, நிப்புன் தனஞ்சய, நிசல தாரக்க, காமில் மிஷார, அஷேன் பண்டார, ரவிந்து பெர்னாண்டோ, சாமிக்க குணசேகர, வனுஜ சஹான், லசித் குரூஸ்புள்ளே, விஷாத் ரந்திக்க, தினுர களுபஹன, லசித் எம்புல்தெனிய.
B பிரிவு: சனோஜ் தர்ஷிக்க, கவிஷ்க அஞ்சுல, டிலும் சதீர, அஷேன் டெனியல், ரொன் சந்த்ரகுப்த.
C பிரிவு: கவீன் பண்டார, முதித்த லக்ஷான், ரவிந்து ரசன்த, தனுக்க தாபரே, மொஹமட் சமாஸ், ஜனிஷ்க பெரேரா, சொஹான் டி லிவேரா, சஹான் கோசல, ஷம்மு அஷான், துவிந்து திலக்கரட்ன.
D பிரிவு: ஆர்.பி.என். ப்ரியதர்ஷன, ரீ.என். சம்ப்பத், என்.சி. கோமசாரு, டபிள்யூ.ஜீ.ஆர்.எல். விஜேநாயக்க, டபிள்யூ.டபிள்யூ.ஏ.ஜீ. மனீஷான், ஆர்.பி. தட்டில், கே.பி.என்.கே. கருணாநாயக்க, ஐ.எஸ்.எஸ். சமரசூரிய, துஷான் விமுக்தி. லக்ஷான் சந்தகேன்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<