பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்கிறார் ஹதுருசிங்க

2081

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்த இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தை பெற்று நாடு திரும்பியிருந்தது. 

அரையிறுதிக்கான வாய்ப்பினை தக்கவைப்பதற்கு இலங்கை அணிக்கு வாய்ப்புகள் இருந்த போதும், வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுடைய திறமையை வெளிப்படுத்த தவறியதன் காரணமாக இலங்கை அணிக்கான அரையிறுதி வாய்ப்பு தவறவிடப்பட்டது. 

“குசல் மெண்டிஸ் திறமையான துடுப்பாட்ட வீரர்” – டி மெல்

உலகக் கிண்ணத்தில் விளையாடிய இலங்கை ……..

இந்த நிலையில், இலங்கை அணி நாட்டை வந்தடைந்திருந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அணியின் பிரகாசிப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதன்போது, தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் பணி தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த ஹதுருசிங்க கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக  மூன்று வருட ஒப்பந்தத்துடன் நியமிக்கப்பட்டார்.

இவரது பயிற்றுவிப்பின் கீழ் விளையாடிய இலங்கை அணி 61 சர்வதேச போட்டிகளில் 20வது போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், 36 போட்டிகளில் தோல்வியைக் கண்டுள்ளது. 33 ஒருநாள் போட்டிகளில் 10 வெற்றிகள், 16 டெஸ்ட் போட்டிகளில் 6 வெற்றிககள், 12 T20I போட்டிகளில் 4 வெற்றிகள் என இலங்கை அணியின் வெற்றி வீதம் அமைந்திருக்கிறது. 

இவ்வாறான நிலையில், உலகக் கிண்ணத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சந்திக்க ஹதுருசிங்க தொடர்ந்தும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நீடிப்பாரா? என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஹதுருசிங்க,

“உலகக் கிண்ணத் தொடரில் வீரர்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு பிரகாசிக்கவில்லை. அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனினும், நாம் அடுத்த தொடர்களில் தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்துள்ள அணியாக விளையாட வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். எனது ஒப்பந்தத்தின் படி இன்னும் 16 மாதங்கள் எஞ்சியிருக்கின்றன. குறித்த காலப்பகுதி நிறைவுவரை அணியுடன் இணைந்திருக்க எண்ணியுள்ளேன்” என்றார். 

இதேவேளை, சந்திக்க ஹதுருசிங்கவை பொருத்தவரை இலங்கை கிரிக்கெட் சபை அவருக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்து பயிற்றுவிப்பாளர் ஒப்பந்தத்தை வழங்கியிருக்கிறது. இவ்வாறு, வழங்கும் பணத்திற்கேற்ப ஹதுருசிங்க தனது கடமையை சரிவர நிறைவேற்றுகின்றாரா? எனவும் வினவப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ஹதுருசிங்க, “எனக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த தொகைக்கு ஏற்ப என்னால் முடிந்ததை நான் செய்து வருகிறேன்” என்றார்.

உலகக் கிண்ணத் தொடரை நிறைவுசெய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் மற்றும் 3 T20I  போட்டிகள் கொண்ட தொடர்களில் இலங்கை அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<