சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி ஆகியவற்றிடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஒரு நாள் பயிற்சிப் போட்டியில், மிக நேர்த்தியான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை தரப்பு போட்டியில் இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக சென்று வெறும் 2 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியினை வீழ்த்தி த்ரில்லர் வெற்றியினை பெற்றுக்கொண்டது.
இலங்கை சுற்றுப் பயணத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி, எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அணியுடன் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னர், இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பிலான அணியுடன் மோதிய இப்போட்டி, கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் ஆரம்பாகியது.
போட்டியின் நாணய சுழற்சியினைப் வெற்றிகொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மிலிந்த சிறிவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரிய அணிக்கு வழங்கினார்.
இதன்படி தில்ஷான் முனவீர மற்றும் குசல் பெரேரா ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்க மைதானம் விரைந்த வாரிய அணி வீரர்கள் அதிரடியான ஆரம்பத்தினை வெளிக்கொணர்ந்தனர்.
வாரியத் தலைவர் அணியின் முதல் விக்கெட்டாக, விரைவாக துடுப்பாடியிருந்த தில்ஷான் முனவீர 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். எனினும் புதிதாக களம் நுழைந்த சந்துன் வீரக்கொடி களத்தில் நின்றிருந்த ஏனைய ஆரம்ப வீரர் குசல் பெரேராவுடன் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
மீண்டும் விறுவிறுப்பான ஒரு போர் களத்தில் சந்திக்கவுள்ள DS மற்றும் மஹாநாம கல்லூரிகள்
இருவரினதும் சிறந்த ஆட்டத்தினால் இரண்டாம் விக்கெட்டுக்காக குறுகிய இடைவெளியில், 116 ஓட்டங்கள் இணைப்பாட்டமாகப் பெறப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரிய அணியில் இரண்டாம் விக்கெட்டாக ஓய்வறை நுழைந்த சந்துன் வீரக்கொடி பங்களாதேஷ் அணியினால் வீசப்பட்ட பந்துகளை பவுண்டரி எல்லைக்கு அப்பால் சிதறடித்ததுடன், அதிரடி ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 67 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டார்.
எனினும், களத்தில் நின்ற குசல் பெரேரா சதூர்யமான ஆட்டம் ஒன்றினை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரித்திருந்தார். 64 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தனது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்ட பெரேரா, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வெளிக்காட்டியிருந்த தொடர்ச்சியான சிறப்பாட்டத்தினை இந்த போட்டியிலும் காட்டி வழமையான ஆட்டத்திற்கு திரும்பியிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
பின்னர், இலங்கை சார்பிலான அணியின் மத்திய வரிசை வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு முதுகெலும்பாக செயற்பட, தமது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து இமாலய மொத்த ஓட்டங்களான 354 ஓட்டங்களினைக் குவித்துக்கொண்டது.
இதில் மத்திய வரிசையில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தனன்ஞய டி சில்வா, 47 பந்துகளிற்கு அரைச்சதம் தாண்டி 52 ஓட்டங்களினை குவித்திருந்ததுடன், திசர பெரேரா 30 பந்துகளிற்கு 41 ஓட்டங்களினை விளாசியிருந்தார். அத்துடன், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 350 ஐ தாண்ட உறுதுனையாக நின்றிருந்த தசுன் சானக்க இறுதி நேரத்தில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக, 12 பந்துகளிற்கு 26 ஓட்டங்களினைப் பெற்று சிறப்பித்திருந்தார்.
சற்று மோசமான பந்து வீச்சினை வெளிக்கொணர்ந்த பங்களாதேஷ் அணியில் மஷ்ரபி மொர்தஸா, தஸ்கின் அஹமட், அபுல் ஹஷன் மற்றும் சுன்சமுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை சுருட்டி இருந்தனர்.
இதனையடுத்து, மிகவும் சவாலான வெற்றி இலக்கான 355 ஓட்டங்களினை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, முதல் பந்திலேயே தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸினை, வலது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாந்துவின் பந்து வீச்சில் ஓட்டம் ஏதுமின்றி பறிகொடுத்தது.
இதனால், மோசமான ஆரம்பத்தினை பங்களாதேஷ் பெற்றிருப்பினும் தளராது நுட்பமான முறையில், இலக்கினை எட்ட விரை கதியில் ஓட்டங்களினை சேர்த்தது.
இரண்டாம் விக்கெட்டிற்காக 115 ஓட்டங்களினை சேர்த்த பங்களாதேஷ் அணியில், இரண்டாம் விக்கெட்டாக பறிபோன செளம்யா சர்க்கர் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 43 பந்துகளிற்கு 47 ஓட்டங்களினைப் பெற்று அரைச் சதத்தைத் தவறவிட்டார்.
மத்திய வரிசை வீரர்களான சப்பீர் ரஹ்மான் மற்றும் மொசாதிக் ஹொசைன் ஆகியோர் துரித கதியிலான ஆட்டம் மூலம் அரைச் சதங்கள் கடந்து அணியின் பாரிய இலக்கினை எட்டும் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்தனர்.
இதில் சப்பீர் ரஹ்மான் 63 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் உள்ளடங்களாக 72 ஓட்டங்களினை விளாசியதோடு, இலங்கை அணியுடனான கடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாயிருந்த மொசாதிக் ஹொசைன் 53 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
பயிற்றுவிப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடரும் மட்டு நகர் ஜோன்சன் ஐடா
இதனையடுத்து இலங்கை தரப்பிலான அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, பங்களாதேஷ் விரைவாக சில விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. எனவே, போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரிய அணி வெற்றி பெறும் என்பது உறுதியாகும் தருவாயில் இருந்தது.
எனினும், பங்களாதேஷின் 7ஆம் விக்கெட்டினை அடுத்து மைதானம் நுழைந்த அவ்வணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா திடுக்கிடும் வகையிலான அதிரடி ஆட்டத்தினை வெளிக்கொணர்ந்து போட்டியின் போக்கையே மாற்றினார்.
களத்தில் நின்றிருந்த மஹமதுல்லாவுடன் கைகோர்த்த அவர், 8ஆம் விக்கெட்டிற்காக 101 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன், வெற்றியலக்கிற்கு மிகவும் நெருங்கியதாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை கொண்டு வந்தார். எனினும், லஹிரு மதுசன்க மூலம் அவரது அதிரடி ஆட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.
மொர்தஸா ஆட்டமிழந்திருப்பினும் போட்டி முழுமையாக, இலங்கை தரப்பிடம் வந்திருக்கவில்லை. எனினும், வாரிய அணியின் வீரர்கள் எதிரணியினை கட்டுப்படுத்தும் விதமாக செயற்பட்டதால் பரபரப்பான இப்போட்டியில், பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று வெறும் 2 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
பங்களாதேஷ் அணியில் இறுதி வரை களத்தில் நின்றிருந்த மஹமதுல்லாஹ் 71 ஓட்டங்களினைப் பெற்றிருந்ததுடன், போட்டியின் திசையினை மாற்றிய மொர்தஸா வெறும் 35 பந்துகளிற்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களினை தமது அணிக்காக சேர்த்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணியின் பந்து வீச்சில், அகில தனன்ஞய மூன்று விக்கெட்டுக்களையும், சத்துரங்க டி சில்வா இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி – 354/7 (50) சந்துன் வீரக்கொடி 67(54), குசல் பெரேரா 64(78), தனன்ஞய டி சில்வா 52(47), திசர பெரேரா 41(30), மிலிந்த சிறிவர்த்தன 32(29), தசுன் சானக்க 26(12)*, சுன்சமுல் இஸ்லாம் 27/1(6)
பங்களாதேஷ் அணி – 352/8 (50) சப்பீர் ரஹ்மான் 72(63), மஹமதுல்லாஹ் 71(68)*,மசரபி மொர்தஸா 58(35), மொசாதிக் ஹொசைன் 53(50), செளம்யா சர்க்கர் 47(43), அகில தனன்ஞய 61/3(8), சத்துரங்க டி சில்வா 53/2(9)
போட்டி முடிவு – இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணி 2 ஓட்டங்களால் வெற்றி