இங்கிலாந்து இளையோர் அணியில் விளையாடி வரும் இலங்கை வீரர் சவீன்

1028

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுடைய சவீன் பெரேரா, நியூசிலாந்தில் தற்போது நடைபெற்று வருகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றார்.

கொழும்பில் பிறந்த சவீன் பெரேரா, சுமார் 7 வருடங்களுக்கு முன் அதாவது, தன்னுடைய 13ஆவது வயதில் கிரிக்கெட் மற்றும் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் குடியேறினார். கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரான சவீன், இங்கிலாந்தின் மிட்ல்செக்ஸ் அணிக்காக சுமார் 5 வருடங்களாக விளையாடி, அண்மையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் மாறினார்.

ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை இளையோர் அணி

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண..

இதனையடுத்து இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னர் தென்னாபிரிக்கா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் முதற்தடவையாக இங்கிலாந்து இளையோர் அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.

குறித்த தொடரில் துடுப்பாட்டத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய இடதுகை துடுப்பாட்ட வீரரான சவீன் பெரேரா, தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். முன்னதாக நமீபியாவுடனான போட்டியில் 74 ஓட்டங்களைக் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

முத்தரப்பு ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சவீன் பெரேராவுக்கு இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் முதற்தடவையாக இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. எனினும், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் இலங்கை இளையோர் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்டது. இதனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் சவீன் பெரேராவுக்கு நேரடியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 26 ஓட்டங்களையும், பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 8 ஓட்டங்களையும் பெற்றார்.

ஐ.சி.சியின் முக்கிய விருதுகளை அள்ளினார் கோஹ்லி

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2017ஆம்..

தனது குறுகியகால வெற்றிப்பயணம் குறித்து சவீன் பெரேரா .சி.சிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிடுகையில், இங்கிலாந்து அணியில் விளையாட கிடைத்தமை பெருமையளிக்கிறது. உண்மையில் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. கடந்த 2 வருடங்களாக மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பலனாகவே எனக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. அத்துடன், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர் எனக்கு சிறந்த பயிற்சியை கொடுத்திருந்ததுடன், நியூசிலாந்தில் விளையாடுவதற்கான சிறந்த மனநிலையையும் ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக, அணியில் உள்ள ஏனைய வீரர்களின் கடினமாக உழைப்பினால் நாம் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றோம். அதில் என்னால் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க முடிந்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனாலும் அந்தப் போட்டியில் நாம் தோல்வியைத் தழுவினோம். ஒரு புறத்தில் அது கவலையாக இருந்தாலும், எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இதேவேளை, தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையை இலங்கையில் ஆரம்பித்த சவீன் பெரேராவுக்கு, அங்குள்ள ஆடுகளங்களில் விளையாடிய அனுபவமும் உண்டு. அதுமாத்திரமல்லாமல் சவீன் பெரேராவின் சகோதரனான திலேஷ் பெரேராவும் கிரிக்கெட் வீரராக அங்குள்ள கழகங்களில் விளையாடி வருகின்றார். அத்துடன் அவர், 2013ஆம் ஆண்டு சகோதரனுடன், இங்கிலாந்தின் வைகோப் ஹவுஸ் மற்றும் க்ரோஸ் எரோஸ் அணிகளுக்கிடையிலான நட்பு ரீதியிலான போட்டியில் முதற்தடவையாக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பில் சவீன் பெரேரா கருத்து வெளியிடுகையில்,

“இலங்கையில் உள்ள ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் எனக்கு இங்கிலாந்தில் சென்று விளையாடுவதற்கு மிகவும் இலகுவாக இருந்தது. இலங்கையில் நாம் 5 அல்லது 6 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவோம். ஆனால் இங்கிலாந்தில் அது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அங்குள்ள ஆடுகளங்களில் ஸ்விங் பந்துகளைத்தான் அதிகம் சந்திக்க நேரிடும். எனவே அவ்வாறான நிலைமையில் எவ்வாறு துடுப்பெடுத்தாடுவது என்பதை நான் விரைவில் கற்றுக்கொண்டேன்.

பங்களாதேஷுடனான மோதலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் சந்தேகம்

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி….

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க முன்னாள் வீரரான ஜொனதன் ட்ரொட் மூலமாக பல ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. அத்துடன் எமது அணிக்காக ஆலோசகராக உள்ள ஜேம்ஸ் டெய்லரின் பங்களிப்பு அதிகம். அவரிடமிருந்து கற்றுக்கொள்வது சிறப்பானது. எனவே சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் விளையாடி அணிக்கு பெருமை சேர்க்க எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரியவை மிகவும் விரும்புகின்ற, அவர்களைப் போல கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரர்களாக ஜொலிப்பதற்கு எதிர்பார்த்துள்ள சவீன் பெரேரா, எதிர்காலத்தில் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.