கம்போடியா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது மோதலில் இலங்கை கால்பந்து அணி பெனால்டி உதையின் மூலம் திரில் வெற்றியினை பதிவுசெய்து AFC ஆசியக்கிண்ண தகுதிகாண் போட்டி தொடருக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் இலங்கையில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டி சமனிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது சுற்று கம்போடியாவில் நடைபெற்றது.
>>ஐரோப்பிய லீக்குகளில் இருந்து வெளியேறும் ஜாம்பவான்கள்!<<
போட்டி ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் கோல்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதும், ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் ஒலிவர் கெலார்ட் இலங்கைக்கான முதல் கோலை பதிவுசெய்தார். எனவே முதல் பாதியில் 1-0 என இலங்கை முன்னிலை பெற்றது.
எனினும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் (50வது நிமிடம்) கம்போடியா அணிக்காக சொசிடன் நேஹன் முதல் கோலை அடித்து போட்டியை சமப்படுத்தினார்.
போட்டி சமனிலையில் செல்ல இரண்டு அணிகளும் அடுத்த கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டன. எனினும் போட்டி நேரத்தில் வாய்ப்புகள் நிறைவுசெய்யப்படவில்லை. பின்னர் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் கோர்னர் கிக் வாய்ப்பொன்றை பயன்படுத்திய கம்போடியா அணி இரண்டாவது கோலை பதிவுசெய்து 2-1 என போட்டியில் முன்னிலையடைந்தது.
எனவே தங்களுடைய தோல்வியை தவிர்த்துக்கொள்வதற்கான கட்டாய கோலுக்காக போராடிய இலங்கை அணிக்காக மிகவும் முக்கியமான கோல் ஒன்றினை கடைசி தருணத்தில் கிளாடியோ மத்தியாஸ் பெற்றுக்கொடுத்து போட்டியை பெனால்டி உதைக்கு அழைத்துச்சென்றார்.
பெனால்டி உதையின் போது கம்போடியா அணியின் முதல் இரண்டு வாய்ப்புகளையும் இலங்கை அணியின் கோல் காப்பாளரும், தலைவருமான சுஜான் பெரேரா தடுத்து இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
அதனையடுத்து இலங்கை அணியின் ஜெக் ஹிங்கர்ட், ஒலிவர் கெலார்ட், சேம் டுரண்ட் மற்றும் லியோன் பெரேரா ஆகியோர் தங்களுடைய பெனால்டி வாய்ப்புகளை கோலாக்க இலங்கை அணி 4-2 என வெற்றியை தங்கள் வசப்படுத்தியது.
குறித்த இந்த வெற்றியின் மூலம் இலங்கை கால்பந்து அணி AFC ஆசியக்கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளதுடன், இந்த தொடரில் சொந்த மண்ணில் 6 போட்டிகளிலும், வெளிநாட்டில் 6 போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<