இலங்கைக்கு மற்றொரு மோசமான தோல்வி!

Netball World Cup 2023

272

தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரின் குழு E இற்கான மற்றுமொரு போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் 71-36 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. 

ஆட்டத்தின் முதல் காற்பகுதியிலிருந்து மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி 18-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது. 

இரண்டாவது காற்பகுதியின் போது இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் களமிறக்கப்பட்ட போதும், அவர் மூன்று நிமிடங்களுக்கு மேல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக செமினி அல்விஸ் இணைக்கப்பட்டார். 

இலங்கை அணி இரண்டாவது காற்பகுதியில் சற்று போட்டியை கொடுத்த போதும், ஜிம்பாப்வே அணி 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை அடைந்தது. எனவே முதற்பாதியில் ஜிம்பாப்வே அணி 33-22 என புள்ளிகளை பெற்றுக்கொண்டது. 

அதனைத்தொடர்ந்து ஆரம்பித்த மூன்றாவது காற்பகுதியில் இலங்கை அணி மேலும் பின்னடைவை அடைய தொடங்கியது. இலங்கை அணி 8 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டதுடன், ஜிம்பாப்வே அணி 19 புள்ளிகளை பெற்று, 52-30 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையடைந்தது. 

மீண்டும் இலங்கை அணிக்கு கடும் சவாலை கொடுத்த ஜிம்பாப்வே அணி 19-6 என நான்காவது காற்பகுதியையும் கைப்பற்றி 71-36 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணிக்காக துலாங்கி வன்னிதிலக்க அதிகபட்சமாக 23 முயற்சிகளில் 20 புள்ளிகளை பெற்றுக்கொடுக்க, திசால அலகம 18 முயற்சிகளில் 14 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணி தங்களுடைய இறுதிப்போட்டியில் பார்படோஸ் அணியை இன்று (02) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<