எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார்.
தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது.
SAG செல்லும் இலங்கை அணியின் தலைமை அதிகாரியாக மேஜர் தம்பத் நியமனம்
நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா……
இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைதீவுகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை அதிகாரிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேநேரம், பாகிஸ்தான் அதிகாரிகளால் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும், ஆறு மாதங்களுக்குள் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து அதற்கான ஏற்பாடுகள் குறித்த உறுதிப்படுத்தலை பாகிஸ்தான் வழங்காவிடின், இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் ஒலிம்பிக் விழா என அழைக்கப்படுகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா சுமார் 2 தசாப்தங்களுக்குப் பிறகு நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 27 போட்டி நிகழ்ச்சிகளுக்காக நடைபெறவுள்ள இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் ஏழு நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 வீர வீராங்களைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆயத்தம் குறித்து அதன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை தெளிவுபடுத்துகின்ற தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் கத்மண்டுவில் நடைபெற்றது.
தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவராக உள்ள ரவி ராம் ஸ்ரேஸ்தாவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் சங்கத்தின் பிரதானிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, இவ்வருட முற்பகுதியில் நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கத்மண்டுவின் தசரத் விளையாட்டரங்கின் கட்டுமானப் பணிகள் இந்த வாரம் அளவில் நிறைவுக்கு வரும் என அந்நாட்டு தேசிய விளையாட்டு குழுவின் செயலாளர் ரமேஷ் குமார் சில்வால் உறுதியளித்தார். அத்துடன், இதற்கான அனைத்து உதவிகளையும் நேபாள அரசாங்கம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமாத்திரமின்றி, உறுப்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெய்வல்லுனர், சைக்கிளோட்டம் மற்றும் குத்துச்சண்டை ஆகிய போட்டிகளுக்காக மேலும் ஒரு வீரரை இணைத்துக் கொள்ளவதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.
இதேவேளை, தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான ஆயத்தம் குறித்து அதன் தலைவரான ரவி ராம் ஸ்ரேஸ்தா கருத்து வெளியிகையில், தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான SAG போட்டிகள் இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்தார்.
இதேநேரம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெற்காசிய விளையாட்டு விழாவை கட்டாயம் நடத்த வேண்டும் என இந்தக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து 2021இல் 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துகின்ற வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்வின் போது SAG கொடி பாகிஸ்தானிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ரவி ராம் ஸ்ரேஸ்தா தெரிவித்தார்.
எனினும், தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியுமா என்பதை உறுதி செய்ய பாகிஸ்தானுக்கு 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு பாகிஸ்தானால் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியாது போனால், 2021இல் நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகியன இணைந்து நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக பாகிஸ்தானில் 1989 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தெற்காசிய விளையாட்டு விழா நடைபெற்றதுடன், இலங்கையில் 1991 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், மாலைதீவுகள் இதுவரை போட்டிகளை நடத்தியது கிடையாது.
SAG போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து குழாம் அறிவிப்பு
நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் வரும் டிசம்பர் ……………..
இதுஇவ்வாறிருக்க, குறித்த கூட்டத்தில் இலங்கை சார்பாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, உப தலைவர் அசங்க செனவிரத்ன, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, போட்டி நடைபெறுகின்ற மைதானங்கள், இலங்கை வீரர்கள் தங்கவுள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களை இவர்கள் பார்வையிட்டனர்.
இதில் அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவது குறித்து பேசிய விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல, ”பாகிஸ்தான் தரப்பு அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான கோரிக்கை விடுத்தது.
எனினும், ஏனைய உறுப்பு நாடுகள் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரங்களை சுட்டிக்காட்டி அங்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும், பாகிஸ்தானுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. பெரும்பாலும், 2021இல் தெற்காசிய விளையாட்டு விழா இலங்கையில் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் தொலைபேசியில் கலந்துரையாடினேன். அவர் அதற்கான வேண்டுகோளை அனுப்புவதற்கு தயார்” என தெரிவித்தார்.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<