SAG கால்பந்து: எந்தவித வெற்றியும் இன்றி நாடு திரும்பும் இலங்கை அணி

183
All Nepal Football Association

தெற்காசிய விளையாட்டு விழாவில், ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் தமது இறுதி குழுநிலை ஆட்டத்தில் இலங்கை அணி பூட்டானிடம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது. 

இதனால், குழு நிலையில் இறுதி இடத்தைப் பெற்றுள்ள இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் தெற்காசிய விளையாட்டு விழாவில் எந்தவித பதக்கமும் இன்றி நாடு திரும்பவுள்ளன. 

இலங்கை அணி முன்னர் இடம்பெற்ற 3 போட்டிகளில் 2 சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்த நிலையிலேயே இன்றை போட்டியில் பங்கேற்றிருந்தது. பூட்டான் அணி 3 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் பலமான அணியான இலங்கையை எதிர்கொண்டது. 

பங்களாதேஷுடன் போராடித் தோற்றது இலங்கை

தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை கால்பந்து அணி, தாம் சந்தித்த மூன்றாவது…

நேற்று முன்தினம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த போட்டியில் ஆடிய முதல் பதினொருவரும் இன்றைய போட்டியில் இலங்கை அணிக்காக ஆடினர். 

டசாரத் ரங்கசாலா அரங்கில் இடம்பெற்ற இப்போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் மொஹமட் பசால் பூட்டான் பின்கள வீரர்களைத் தாண்டி பரிமாற்றிய பந்தை, மொஹமட் ஆகிப் கோலுக்கு செலுத்தும்போது பூட்டான் கோல் காப்பாளர் சங்போ பந்தைப் பற்றிக்கொண்டார்.

தொடர்ந்து 18ஆவது நிமிடத்தில் பூட்டான் வீரரை மனரம் பெரேரா முறையற்ற விதத்தில் வீழ்த்தியதால் மஞ்சள் அட்டை பெற்றதுடன் பூட்டான் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதன்போது மைதானத்தின் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை சிமி ஓஜி ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார். 

போட்டியின் முதல் 25 நிமிடங்களிலும் இலங்கை வீரர்கள் தமது கோல் பரப்பில் அதிகமான தவறுகளை மேற்கொண்டு எதிரணிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.  

27 ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர்கள் ஒரு கோலைப் பெற்ற போதும் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. 

30ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் பந்தைப் பெற்ற இலங்கை அணித் தலைவர் பசால், பூட்டான் கோலுக்கு அருகில் பந்தை எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்கையில் எதிரணி வீரர் அதனைத் தடுத்து வெளியேற்றினார். 

அடுத்த நிமிடம் சுந்தரராஜ் நிரேஷ் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை, சங்போ பிடித்தார். 

>>Photos: Day 07 | South Asian Games 2019<<

அதன் பின்னர் இலங்கை வீரர்கள் ஒருசில வாய்ப்புக்களை அடுத்தடுத்து பெற்றனர். குறிப்பாக, நவீன் ஜூட் பின்கள வீரரைத் தாண்டி பந்தை எடுத்துச் செல்கையில் சங்கோ வேகமாக வந்து பந்தைப் பிடித்தார். 

தொடர்ந்து எதிரணியின் கோலுக்கு அண்மையில் இலங்கை வீரர்கள் எடுத்த கோல் முயற்சியின் பின்னர் சமோத் டில்ஷான் கோல் நோக்கி உதைந்த போது பந்து தடுப்பு வீரரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. 

எனவே, ப்ரீ கிக்கின்போது பெற்ற கோலுடன் முதல் பாதியில் பூட்டான் வீரர்கள் முன்னிலை பெற்றனர். 

முதல் பாதி இலங்கை 0 – 1 பூட்டான் 

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5ஆவது நிமிடத்தில் இலங்கை பின்கள வீரர்கள் பந்துப் பரிமாற்றத்தின்போது விட்ட தவறைப் பயன்படுத்தி பூட்டான் வீரர் பந்தைப் பெற்று கோலுக்கு செலுத்தியபோது, வலது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் அது வெளியேறியது. 

பூட்டான் வீரர்கள் இலங்கை அணியின் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியதுடன், அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர். 

ஆட்டத்தின் 66ஆவது நிமிடம் ஷமோத் டில்ஷான் பெனால்டி எல்லைக்கு அண்மையில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை பூட்டான் கோல் காப்பாளர் சங்போ தடுத்தார். 

மீண்டும் அதற்கு அடுத்த நிமிடம் எதிரணி வீரரை இலங்கை அணியின் பெனால்டி எல்லையில் வைத்து ஜூட் சுபன் வீழ்த்த, பூட்டானுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதனை தாவா ஷெரிங் இலகுவாக கோலாக்கினார். 

76ஆவது நிமிடம் பூட்டான் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை மத்திய களத்தில் இருந்து தாவா ஷெரிங் பெற்றார். கோலுக்குள் செல்லும் வகையில் அவர் உதைந்த பந்தை சுஜான் பெரேரா பாய்ந்து வெளியே தட்டி விட்டார். 

அடுத்த 4 நிமிடங்களில் இலங்கை பின்கள வீரர்கள் தமது கோல் எல்லையில் மேற்கொண்ட மோசமான பந்துப் பரிமாற்றத்தின்போது, பந்தைப் பெற்ற யெசேய் டோர்ஜி இலகுவாக பந்தை வலைக்குள் செலுத்தி பூட்டான் அணிக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தார். 

ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தின் பின்னர், இலங்கை வீரர்கள் தமக்கான த்ரோ போல் வாய்ப்புக்களை நீண்ட தூரத்திற்கு எறிந்து கோலுக்கான வாய்ப்புக்களுக்கு முயற்சி மேற்கொண்ட போதும் அவை சிறப்பான நிறைவுகள் இன்றி வீணானது. 

போட்டியின் மேலதிக நிமிடத்திலும் இலங்கை அணிக்கு எதிரணியின் கோல் எல்லையில் கிடைத்த வாய்ப்பை, கோல் கம்பத்தை விட்டு வெளியே அடித்து வீணடித்தனர்.  

எனவே, 3 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பூட்டான் அணி தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றது. 

முழு நேரம் இலங்கை 0 – 3 பூட்டான்

கோல் பெற்றவர்கள் 

பூட்டான் – சிமி ஓஜி 19’, தாவா ஷெரிங் 69’ (P), யெசேய் டோர்ஜி 80’ 

மஞ்சள் அட்டை 

பூட்டான் – சங்போ 81’ 

இலங்கை – ஜோய் நிதுசன் 18, ஜூட் சுபன் 86’ 

>>SAG செய்திகளைப் படிக்க<<