இலங்கை – லாவோஸ் கால்பந்து அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் நட்புரீதியிலான (Friendly) கால்பந்து மோதலில், 2-1 என்கிற கோல்கள் கணக்கில் இலங்கை வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>இவ்வாரம் ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை<<
2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ண (மூன்றாம் சுற்று) தகுதிகாண் போட்டிகளை இந்த வாரம் ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து அணியானது அதற்கு முன்னர் நேற்று (20) லாவோஸ் கால்பந்து வீரர்களை அவர்களது சொந்த மண்ணில் வைத்து எதிர் கொண்டிருந்தது.
பிபா (FIFA) தரவரிசையில் இலங்கையை (200) விட முன்னிலையில் காணப்படும் லாவோஸ் வீரர்கள் (186) இலங்கை கால்பந்து அணியினை எதிர் கொண்ட போட்டியானது வியேன்டியேனில் (Vientiane) உள்ள தேசிய கால்பந்து அரங்கில் நடைபெற்றிருந்தது.
பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்த இந்த கால்பந்து மோதலில் ஆக்ரோசமான துவக்கத்தினை லாவோஸ் அணியினர் வழங்கிய போதும், முதல் 10 நிமிடங்களின் பின்னர் இலங்கை வீரர்கள் போட்டியில் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
இந்த நிலையில் இலங்கை சார்பில் முன்கள வீரரான வேட் டெக்கர் (Wade Dekker) 16ஆவது நிமிடத்தில் லாவோஸின் தடுப்பினைத் தகர்த்து போட்டியின் முதல் கோலினைப் பதிவு செய்தார்.
முதல் கோலின் பின்னர் போட்டியின் முதல் பாதியில் இலங்கை வீரர்கள் தமது ஆதிக்கத்தினை தொடர்ந்தும் கொண்டு சென்ற நிலையில் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் மீண்டும் கோலுக்கான முயற்சியொன்று இலங்கை வீரர்களால் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியளிக்காமல் முதல் பாதி நிறைவுக்கு வந்தது.
முதல் பாதி: லாவோஸ் 0 – 1 இலங்கை
போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பித்து பந்துப் பரிமாற்றங்களில் இலங்கை சற்று பின்தங்கி காணப்பட்ட போதும் கிடைத்த வாய்ப்பினை சரியாக உபயோகம் செய்த ஆதவன் ராஜமோகன் இலங்கை அணிக்காக இரண்டாவது கோலினைப் பதிவு செய்தார்.
பின்னர் பந்தின் ஆதிக்கம் லாவோஸ் அணிக்கு பெரு வாரியாக கிடைத்த போதும் அவர்களால் எதிர்பார்த்த கோல்களை பெறுவது சிரமமாக காணப்பட்டது. லாவோஸ் அணி போட்டியின் 70ஆவது நிமிடத்தில் கோலுக்கான முயற்சியொன்றை மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்டு ஆட்டம் இறுதிக்கட்டத்தினை அடைந்த நிலையில் லாவோஸ் அணிக்காக கியாடவோனே சோவன்னி முதல் கோலினைப் 88ஆவது நிமிடத்தில் பெற்றார். இதனால் போட்டியில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்பட்ட போதும் எந்த அணிகளும் கோல்கள் பெற்றிருக்கவில்லை. எனவே இலங்கை கால்பந்து அணியானது போட்டியினை முன்னர் பெற்ற கோல்களுடன் தமது முன்னிலையில் நிறைவு செய்து கொண்டது.
முழு நேரம்: லாவோஸ் 1 – 2 இலங்கை
கோல்கள்
இலங்கை – வேட் டக்கர் 16’, ஆதவன் ராஜமோகன் 54’
லாவோஸ் – கியாடவோனே சோவன்னி 88’
அட்டைகள்
லாவோஸ் – பொசம்போன் பன்யவோங் (மஞ்சள் அட்டை)
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<