சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் ஆசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையின் 18 வயத்திற்குட்பட்ட மகளிர் கூடைப்பந்து அணி, தாய்லாந்து நோக்கி புறப்படவுள்ளது.
நவம்பர் 13ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை மகளிர் அணி குறித்து சற்று பாப்போம்.
இலங்கை அணிக்கான தேர்வுகள் ஜூலை மாத ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. முதலில் 50 பேருக்கும் அதிகமானவர்களை உள்ளடக்கிய குழாம் ஒன்று தெரிவு செய்யப்பட்டது. பின்னர் அக்குழாமிலிருந்து 15 சிறந்த வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் வெற்றியீட்டிய குட்ஷெப்பர்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து 3 வீராங்கனைகள் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு, அதில் ஒருவர் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் சிறந்த தாக்குதல் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட, குட்ஷெப்பர்ட் கல்லூரியின் நிர்மா சசந்தி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தினால் மலேசியாவில் நடாத்தப்பட்ட 18 வயத்திற்குட்பட்ட 3×3 போட்டிகளிலும் இவர் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவரோடு ஷெரீன் பெரேரா மற்றும் தருஷி விஜேமான ஆகியோரும் குட்ஷெப்பர்ட் கல்லூரியிலிந்து இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட ஹோலி பெமிலி பெண்கள் கல்லூரிக்காக சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய மந்திலா கலஸ்ஸகே பிரதி அணித்தலைவராக தெரிவு செயப்பட்டுள்ளார். அவரோடு, அவருடைய கல்லூரியை சேர்ந்த திலுமினி குணவர்தனவும் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட ஜோசப் பெண்கள் கல்லூரியின் தானியா பெரேரா, நிகாரி பெரேரா மற்றும் சலனி பெரேரா ஆகியோரும் இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நுகேகொட ஜோசப் பெண்கள் கல்லூரி, நடைபெற்று முடிந்த ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் 2ஆம் இடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் 4ஆவது இடத்திற்கு தமது கல்லூரியை அழைத்து சென்ற, பிரெஸ்பிட்டேரியன் கல்லூரியை சேர்ந்த நிபுணி நவோதயா மற்றும் திலக்ஷி நவோதயா ஆகியோரும் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச பாடசாலைகள் சார்பாக, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த லுப்னா மோர்சேத் மற்றும் கொழும்பு சர்வதேச பாடசாலையை சேர்ந்த லெயியா ஹம்சா ஆகியோரும் இலங்கை அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அண்மையில் நடைப்பெற்ற சர்வதேச பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில், வத்தளை லைசியம் கல்லூரி முதல் இடத்தையும், கொழும்பு சர்வதேச பாடசாலை 3ஆம் இடத்தையும் கைப்பற்றிக்கொண்டது.
லாவ்ரன்ஸ் கல்லூரியை சேர்ந்த மல்ஷா வர்ணகுல, விஷாகா வித்தியாலயத்தை சேர்ந்த ரெசுரீ விஜேசுந்தர மற்றும் அவே மரியா பெண்கள் கல்லூரியை சேர்ந்த செத்மா பெர்னாண்டோ ஆகியோரே அணியில் இடம்பெற்றுள்ள ஏனைய வீராங்கனைகளாவர். இவர்களது பாடசாலை அணிகள் ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப்பில் குழு மட்டத்திலேயே வெளியேறியமை நினைவுகூறத்தக்கது.
வேகம், உயரம், திறமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நியாயமான முறையில் அணிக்கான வீராங்கனைகள் தேர்வுகள் நடைபெற்றுள்ளமை பாராட்டுக்குரியது.
கொட்டாஞ்சேனை குட்ஷெப்பர்ட் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் சுசில் உடுக்கும்புற பிரதான பயிற்றுவிப்பாளராகவும், புத்திக குமுதப்பெரும துணை பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், சுசில் உடுக்கும்புற, தனது பயிற்றுவிப்பு திறனை மேம்படுத்த கிடைத்த புலமை பரிசிலின் காரணமாக வெளிநாடு பயணிக்கவுள்ளதால் கொழும்பு ரோயல் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் பிரசன்ன ஜயசிங்க பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரசன்ன ஜயசிங்க எமக்கு கருத்து தெரிவித்த பொழுது “இந்த ஆசிய போட்டிகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தற்போது நாம் இரண்டாம் பிரிவிலேயே விளையாடவுள்ளோம். அதனால் எமது நோக்கம் 2ஆம் பிரிவில் முதல் இடத்தை பிடிப்பதாகும். இதனால் அடுத்த வருடம் எம்மால் பிரிவு ஒன்றில் விளையாட முடியும்“ எனத் தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டில் வித்தியாசமான சூழலில் விளையாடுவது குறித்து அவர் கருத்து தெரிவித்த பொழுது “ஆம், குளிரூட்டப்பட்ட உள்ளக அரங்குகளில் விளையாடவுள்ளமை எமக்கு பெரும் சவாலாகும். எனினும் இதனை கருத்தில் கொண்டு நாம் முறையாக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதனால் அச்சூழலை எம்மால் சமாளிக்க முடியும்“ என தெரிவித்தார்.
18 வயத்திற்குட்பட்ட இலங்கை மகளிர் கூடைப்பந்து அணி நவம்பர் 8ஆம் திகதி தாய்லாந்து நோக்கி பயணமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இரு பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இலங்கை சிரேஷ்ட மகளிர் கூடைப்பந்து அணி இவ்வருடம் நடைபெற்ற தெற்காசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் சுற்றில் சம்பியன் பட்டம் வென்றது. இதேபோல், கனிஷ்ட அணியாலும் சம்பியன் ஆக முடியுமா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.
ThePapare.com சார்பாக இவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.