பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள மேற்காசிய பேஸ்போல் கிண்ணத்தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் நேபாள அணியை, இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது.
மேற்காசிய பேஸ்போல் கிண்ணத்தொடரானது ஜனவரி 26ம் திகதி முதல் பெப்ரவரி 2ம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகின்றது.
இந்த தொடரானது கடந்த வருடம் நடைபெறவிருந்த நிலையில், இலங்கை அணி பயிற்சிகளை ஆரம்பித்திருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
>> கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப்புக்கு 3 நிந்தவூர் வீரர்கள் தெரிவு
எனினும் இதற்கான பயிற்சிகளை இலங்கை அணி சிறப்பாக மேற்கொண்டுள்ளதுடன், நடப்பு சம்பியனான இலங்கை அணி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய பேஸ்போல் தொடரில் பிரகாசித்த சிறந்த வீரர்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி கிண்ணத்துக்கு சாதகமான அணியாக அதிகம் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் பல லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். எனவே 2019ம் ஆண்டு இலங்கை அணியிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை பேஸ்போல் சங்கத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சு அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றது. குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர் ரொஹான் திசாநாயக்க, செயலாளர் K. மஹீஷன் மற்றும் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய ஆகியோர் அணிக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுத்துள்ளனர் என பேஸ்போல் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணியானது தங்களுடைய குழுநிலை போட்டிகளில் நேபாளம், இந்தியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<