தனியாக நின்று பங்களாதேஷுக்கு சவால் கொடுத்த றிஹாஸ்

SAFF Under 17 Championship 2022

456

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்ப நாளான திங்கட்கிழமை (5) இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் இளையோர் அணி 5 – 1 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை இளையோர் அணியை வெற்றி கொண்டுள்ளது.

எனினும், போட்டியில் இலங்கை கோல் காப்பாளராக செயற்பட்ட திருகோணமலை கிண்ணியா வீரர் மொஹமட் ரிஹாசின் அபாரத் தடுப்புகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

SAFF 17 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடனங்கள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இலங்கை எதிர் பங்களாதேஷ் இடையிலான போட்டியின் ஏழாவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் மத்திய களத்தில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை இலங்கை கோல் காப்பாளர் ரிஹாஸ் மறைத்தார். இதன்போது கோல் காப்பாளருக்கு அண்மையில் விழுந்த பந்தை பங்களாதேஷ் வீரர் ரூபெல் சயிக் வேகமாக கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

அந்த கோல் பெறப்பட்டு 3 நிமிடங்களில் பங்களாதேஷ் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை சக வீரர் ஹெடர் செய்ய, அதனை முர்ஷித் அலி கோலாக்கியமையினால் முதல் 10 நிமிடங்களில் இரண்டு கோல்களால் இலங்கை பின்னடைவு கண்டது.

முதல் பாதியில் இலங்கை அணி பெற்ற முதல் வாய்ப்பாக, சதேவ் தத்சர இலங்கை அணியின் எல்லையில் இருந்து பந்தை எடுத்துச் சென்று, எதிரணியின் கோல் எல்லையில் தடுப்பு வீரரையும் தாண்டி பந்தை கடத்தி கோலுக்கு உதைய, அதனை பங்களாதேஷ் கோல் காப்பாளர் அசிப் இலகுவாகத் தடுத்தார்.

முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் இலங்கை அணிக்கு எதிரணியின் மத்திய களத்தில் இடது பக்கத்தில் கிடைத்த பிரீ கிக்கை பசுல் ரஹ்மான் பெற்றார். அவர் உதைந்த பந்து கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

முதல் பாதியில் பங்களாதேஷ் வீரர்கள் கோலுக்காக மேற்கொண்ட முயற்சிகளில் ஆறுக்கும் அதிகமான வாய்ப்புக்களை இலங்கை கோல் காப்பாளர் றிஹாஸ் தடுத்தார். இதனால், பங்களாதேஷ் அணியை இரண்டு கோல்களுடன் கட்டுப்படுத்தி முதல் பாதியை நிறைவு செய்ய இலங்கை அணியால் முடிந்தது.

முதல் பாதி: பங்களாதேஷ் 2 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகிய பின்னரும் பங்களாதேஷ் வீரர்கள் கோலுக்கு மேற்கொண்ட பல முயற்சிகளை றிஹாஸ் அடுத்தடுத்து தடுத்தமை அவ்வணிக்கு பெரிதும் சவாலான இருந்தது.

இந்நிலையில், 75ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் வீரர் ஒரு திசையில் இருந்து முன்னோக்கி எடுத்து வந்து உள்ளனுப்பிய பந்தை, கோலின் இடது பக்க கம்பத்திற்கு அருகாமையினால் கோலுக்குள் செலுத்தி முர்ஷித் அலி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

அந்த கோல் பெறப்பட்டு 2 நிமிடங்களில் பங்களாதேஷ் பின்கள வீரர் கோல் காப்பாளர் அசிபிற்கு கொடுத்த பந்தை அவர் தடுப்பதில் விட்ட தவறின்போது பந்தைப் பெற்ற இலங்கை வீரர் யஸ்ஸெர் சர்ப்ராஸ் முன்னோக்கி பந்தை எடுத்துச் சென்று இலங்கை அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

மீண்டும் 79 ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் கோல் திசையில் ஒரு பக்கத்தில் கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை சிராஜுல் இஸ்லாம் ஹெடர் செய்து அவ்வணிக்கான நான்காவது கோலையும் பதிவு செய்தார்.

போட்டியின் உபாதையீடு நேரத்தில் இலங்கை அணியின் கோல் எல்லைக்கு பந்தை எடுத்துவந்து சக வீரரிடம் பரிமாற்றம் செய்து, பந்தை மீண்டும் பெற்ற மொஹமட் நஸீம் பங்களாதேஷ் அணிக்கான ஐந்தாவது கோலையும் பதிவு செய்தார்.

இரண்டாம் பாதியிலும் சிறந்த முறையில் செயற்பட்ட றிஹாஸ் பங்களாதேஷ் வீரர்களின் முயற்சிகளை தடுத்தது மாத்திரமன்றி, போட்டியின் முழு நேரத்தமில் 20இற்கும் அதிகமான எதிரணியின் கோல் முயற்சிகளை முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

 எனினும், போட்டி நிறைவில் 5-1 என வெற்றி பெற்ற பங்களாதேஷ் வீரர்கள் வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தனர்.

பங்களாதேஷ் எதிர்வரும் 7ஆம் திகதியும், இலங்கை அணி எதிர்வரும் 9ஆம் திகதியும் தமது அடுத்த போட்டிகளில் மாலைதீவுகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பங்களாதேஷ் 5 – 1 இலங்கை

கோல் பெற்றவர்கள்

பங்களாதேஷ் – ரூபெல் சயிக் 7’, முர்ஷித் அலி 10’&75’, சிராஜுல் இஸ்லாம் 79’, மொஹமட் நஸீம் 90+2’

இலங்கை – யஸ்ஸெர் சர்ப்ராஸ் 77’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

  • பங்களாதேஷ் – பரெஜ் அஹமட் 45+1’
  • இலங்கை – பசுல் ரஹ்மான் 36’, மொஹமட் அப்துல்லாஹ் 40’

பூட்டான் எதிர் இந்தியா

திங்கட்கிழமை முதல் போட்டியாக இதே அரங்கில் மாலை இடம்பெற்ற பூட்டானுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் இந்திய வீரர் கங்டே இரண்டு கோல்களைப் பதிவு செய்தார்.

மீண்டும் இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் அவ்வணியின் கயிட்டே மற்றொரு கோலையும் பதிவு செய்ய, இந்திய வீரர்கள் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றனர்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<