தேசிய மட்டத்தில் இடம்பெறும் முதல் தர பட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டிகள் 64ஆவது தடவையாகவும், இம்மாதம் 22ஆம் திகதியில் இருந்து 29ஆம் திகதி வரை குருநாகலையில் நடைபேறவுள்ளன.
இலங்கை பட்மிண்டன் கட்டுப்பாட்டு சபையும், இலங்கை பாடசாலைகள் பட்மிண்டன் கட்டுப்பாட்டு சபையான இலங்கை பாடசாலைகள் பட்மிண்டன் சங்கம் என்பன ஒன்றிணைந்து வழமையாக ஓவ்வொரு வருடமும் நடாத்தும் இலங்கை தேசிய மட்டத்திலான பட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டிகளுடன் இணைந்து இம்முறை முதல் முறையாக தேசிய இளையோர் பட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்பவுள்ளன.
நடைபெறவிருக்கும் தேசிய பட்மிண்டன் போட்டிகளை பற்றி ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தும் நோக்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்லேயே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்போது, இலங்கை பட்மிண்டன் சங்கத் தலைவர் சுராஜ் டெடந்தேனிய கருது தெரிவிக்கையில், ”பட்மிண்டன் கட்டுப்பாட்டு சபையானது, பட்மிண்டன் விளையாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டியை கொழும்பு நகரத்துக்கு வெளியில் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது.
இறுதியாக நாங்கள் இப்போட்டிகளை அநுராதபுரத்தில் நடத்தியிருந்தோம். இம்முறை, இலங்கை தேசிய மட்டத்துடன், இலங்கை இளையோர் பட்மிண்டன் போட்டிகளையும் இணைத்து குருநாகலை நகரத்துக்கு எடுத்துச் செல்கிறோம். இம்முறை, பாடசாலை செல்லும் 5,000 தனிப்பட்ட போட்டியாளர்களும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த தேசிய போட்டிகளை, குருநாகலை பட்மிண்டன் சங்கம், இலங்கை பட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்கின்றது. இப்போட்டிகள் அனைத்தும் குருநாகலை நகரசபை அரங்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான இராணுவ முகாம் பட்மிண்டன் அரங்கு ஆகிய இரண்டு இடங்களில் இடம்பெறவுள்ளன.
தேசிய இளையோர் பட்மிண்டன் போட்டிகள் 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அடிப்படையிலும், தனி மற்றும் இரட்டையர்கள் என ஆடவர், மகளிர் இரு பிரிவுகளுக்கும் நடைபெறவுள்ளன. ஆரம்ப கட்ட போட்டிகள் அனைத்தும் D.S. சேனாநாயக்க கல்லூரி மற்றும் இலங்கை பட்மிண்டன் சங்கத்திலும் எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெறும். அதன் பின் காலிறுதி போட்டிகளிருந்து குருநாகலையில் நடாத்தி, 29ஆம் திகதி நிறைவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கெளரவ. விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இறுதிப்போட்டிகள் நடைபெறும் ஒக்டோபர் 29ஆம் திகதி கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி போட்டி விழாவை அலங்கரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.