இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை

2634

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் நல்லுறவை விருத்தி செய்யும் நோக்கோடு, ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட் வாரியத்தின் உருவாக்கத்தின் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதல் தடவையாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அதன் 14 ஆவது அத்தியாயத்தை அடைந்திருக்கின்றது.

இந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் விழாக்கோலம் காணவுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் சனிக்கிழமை (15) ஆரம்பமாகவுள்ளதுடன் இம்முறைக்கான தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் என ஆசியாவின் திறமை மிக்க கிரிக்கெட் அணிகள் தமக்கிடையே பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

>> இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு

2016 ஆம் ஆண்டு கடைசியாக T20 போட்டிகளாக நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இம்முறை ஒரு நாள் போட்டிகளாக இடம்பெறுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளாகவே இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் கடந்த காலத்தினை எடுத்துப் பார்க்கும் போது ஐந்து தடவைகள் இலங்கை அணியும், இந்திய அணியும் சம்பியன் பட்டத்தை வென்று தொடரில் வெற்றிகரமான அணிகளாக மாறியிருந்தன.

அந்தவகையில், கடந்த கால ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்ற நினைவுகளை ஒரு தடவை மீட்டுவோம்.

1986 – இலங்கை

  • பங்குபற்றிய அணிகள் – 3

1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தின் இரண்டாவது அத்தியாயப் போட்டிகளே, இலங்கையின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றித் தொடராக அமைந்திருந்தது.

இந்த ஆசியக் கிண்ண தொடரை இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக இந்தியா புறக்கணித்ததுடன், இந்தியாவிற்கு பதிலாக 1984 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி தொடருக்குள் முதல் தடவையாக உள்வாங்கப்பட்டிருந்தது.

இந்த ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை  பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவிய போதிலும் தமது அடுத்த போட்டியில் பங்களாதேஷினை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் ஆடும் தகுதியைப் பெற்றது.

தொடர்ந்து கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியினால், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 192 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்த இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் கன்னி சம்பியன்களாக நாமம் சூடினர்.

>> இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் தமிம் இக்பால் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கை அணியின் கன்னி ஆசியக் கிண்ண வெற்றிக்கு அர்ஜூன ரணதுங்க அரைச்சதம் ஒன்றினை விளாசி உதவியிருந்ததுடன், வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கெளசிக் அமலன் 4 விக்கெட்டுக்களை சாய்த்து தனது பங்களிப்பினை வழங்கி இருந்தார்.

1997 – இலங்கை

  • பங்குபற்றிய அணிகள் – 4

தமது கன்னி ஆசியக் கிண்ணத் தொடர் வெற்றியை அடுத்து, இலங்கை அணி அடுத்ததாக இடம்பெற்ற மூன்று ஆசியக் கிண்ணத் தொடர்களின் (1988,1990/91,1995) இறுதிப் போட்டிகளுக்கும் தகுதி பெற்ற போதிலும், மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவுடன் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியிருந்தனர்.

இப்படியான ஒரு நிலையில் 1986 ஆம் ஆண்டிற்கு பிறகு 1997 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண தொடரின் ஆறாவது அத்தியாயப் போட்டிகள் இலங்கையில் மீண்டும் நடைபெற்றன. இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபற்றிய இந்த தொடரில் புதிய கிரிக்கெட் உலகக் கிண்ண சம்பியன்களாக இலங்கை களம் கண்டிருந்தது.

இலங்கை அணி தொடரின் முதல் கட்ட போட்டிகள் எதிலும் தோல்வியுறாமல் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.  மறுமுனையில் இந்திய அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரில், தொடர்ச்சியாக நான்காவது தடவை இலங்கையை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள தயராகினர்.

கொழும்பு ஆர். பிரேதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை குவித்தது.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 240 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை அணிக்கு மாவன் அட்டபத்து (84) துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.

இதனால், இந்தியாவின் வெற்றி இலக்கை இலங்கை 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்ததுடன், ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிகளில் இந்தியாவுடனான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆசியக் கிண்ணத்தில் இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டம் வென்றது.

2004 – இலங்கை

  • பங்குபற்றிய அணிகள் – 6

இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின், எட்டாவது அத்தியாயப் போட்டிகளிலேயே இலங்கை மூன்றாவது சம்பியன் பட்டத்தை வென்றது.

>> விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியே தீருவேன் – ஹசன் அலி

இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் ஆசியாவில் டெஸ்ட் அந்தஸ்து உள்ள கிரிக்கெட் அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றுக்கு மேலதிகமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகள் முதல் தடவையாக பங்குபற்றியிருந்தன.

ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் அதனை அடுத்து இடம்பெற்ற “சுபர் 4” சுற்றின் அடிப்படையில் இலங்கை அணியும், இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, இந்தியாவுக்கு சவால் குறைந்த வெற்றி இலக்கான 229 ஓட்டங்களையே நிர்ணயம் செய்தது.

@AFP

இந்த இலக்கை 50 ஓவர்களில் இந்தியா இலகுவாக அடைந்துவிடும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் உபுல் சந்தன, சனத் ஜயசூரிய ஆகியோரின் சுழல் பந்துவீச்சினை முகம் கொடுக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி 203 ஓட்டங்களையே குவித்து போட்டியில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி ஒன்றில் இந்திய அணியை மூன்றாவது தடவையாக வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணியினர் ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது சம்பியன்களாக நாமம் சூடினர்.

2008 – பாகிஸ்தான்

  • பங்குபற்றிய அணிகள் – 6

பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்  கிண்ணத்தின் ஒன்பதாவது அத்தியாயப் போட்டிகளிலேயே, இலங்கை தமது நான்காவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றது. இதேநேரம் வெளிநாடு ஒன்றில் இலங்கை அணி வென்ற முதல் ஆசியக் கிண்ணத் தொடராகவும் இது பதிவாகியது.

@AFP

இந்த ஆசியக் கிண்ணத் தொடரிலும், 2004 ஆம் ஆண்டு தொடரில் பங்குபற்றியிருந்த அதே ஆறு அணிகளே பலப்பரீட்சை நடாத்தின. தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளுக்கு அமைவாக இந்திய அணியும், இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கராச்சி தேசிய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, சனத் ஜயசூரியவின் அதிரடி சதத்தோடு சவால் மிக்க வெற்றி இலக்கான 274 ஓட்டங்களை 50 ஓவர்களில் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, விரேந்திர ஷேவாக்கின் அதிரடியோடு நல்ல ஆரம்பத்தை காட்டியிருந்த போதிலும் இலங்கை சார்பில் பந்துவீச வந்த அஜந்த மெண்டிஸ் இந்திய வீரர்களை தனது சுழல் மூலம் நிலைகுலையச் செய்தார்.

>> “உலகின் மிக மோசமான DRS கணிப்பாளர் கோஹ்லி” : மைக்கல் வோர்கன்

@AFP

இதனால், இந்திய அணி 173 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து மிகவும் மோசமான தோல்வியொன்றை பதிவு செய்தது. அஜந்த மென்டிஸ் வெறும் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் சிறந்ததொரு பந்துவீச்சு பெறுமதியை பதிவு செய்தார்.

இந்த அதிரடி வெற்றியோடு இலங்கை அணி, நான்காவது முறையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தமது நான்காவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினை வென்றது.

2014 – பங்களாதேஷ்

  • பங்குபற்றிய அணிகள் – 5

இலங்கை அணி சரிவுகளை சந்திக்க முன் அதனுடைய பொற்காலம் எனக் கருதப்படும், 2014 ஆம் ஆண்டிலேயே ஐந்தாவது ஆசியக் கிண்ண சம்பியன் பட்டத்தினை வென்றது.

பங்களாதேஷில் இடம்பெற்ற இந்த 12 ஆவது அத்தியாய ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என ஐந்து அணிகள் பங்குபற்றியிருந்தன.

தொடரின் முதல் கட்ட போட்டிகளின் அடிப்படையில் எந்தவொரு போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இலங்கையின் சவாலை இறுதிப் போட்டியில் எதிர் கொள்ள பாகிஸ்தான் அணி தயராகியிருந்தது.

சேர்-ஈ-பங்களா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, பவாட் அலாம் பெற்றுக் கொண்ட சதமொன்றுடன் (114*) 50 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை குவித்தது.

@AFP

இதன் பின்னர், ஆட்டத்தின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 261 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு, லஹிரு திரிமான்ன சதம் (101) கடந்து நம்பிக்கை அளித்தார். திரிமான்னவின் சதத்தின் உதவியோடு இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை இழந்து 46.2 ஓவர்களில் அடைந்ததுடன், ஆசியக் கிண்ண தொடரின் சம்பியன்களாக ஐந்தாவது தடவையும் நாமம் சூடியது.

அத்தோடு இலங்கை இந்த ஆசியக் கிண்ண வெற்றியோடு ஒரு நாள் போட்டிகளாக இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தை அதிக தடவைகள் (5) வென்ற இந்தியாவின் சாதனையையும் சமநிலை செய்தது.

>> சிங்கர் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டாவது அணியாக புனித செபஸ்டியன் கல்லூரி

இப்படியாக ஆசியக் கிண்ணத்தில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் இலங்கை அணி, இம்முறைக்கான தொடரில் என்ன செய்யப் போகின்றது என்பதை நாம் பார்க்க சில நாட்களை பொறுமையாக கடத்த வேண்டி உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<