இன்று பிற்பகல் கொழும்பு ஆஸ்ட்ரோ டர்பில் (Astro Turf) நடைபெற்ற பங்களாதேஷ் விமானப்படை மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கு இடையிலான ஹொக்கி போட்டியில், இலங்கை விமானப்படை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
மூன்றாம் இடத்தை தவறவிட்ட இலங்கை இளையோர் அணி
இலங்கை விமானப்படை ஹொக்கி அணியுடன் இரண்டு நட்பு ரீதியிலான ஹொக்கி போட்டிகளுக்காக பங்களாதேஷ் விமானப்படை ஹொக்கி அணி நேற்றைய தினம் இலங்கைக்கு வருகைதந்தது. அந்த வகையில் முதலாவது போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதல் இலங்கை விமானப்படை அணி ஆதிக்கம் செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் போட்டியின் நான்கவது நிமிடம் மிகவும் வேகமான பந்து நகர்த்தல்கள் மூலம் பங்களாதேஷ் அணியின் தடுப்பு வீரர்களை ஊடறுத்து முன்னேறிய இலங்கை விமானப்படை அணி சார்பாக முன்கள வீரர் K.W. மேல்டர் முதலாவது கோலைப் பதிவு செய்தார்.
அதனையடுத்து, சில நிமிடங்களிலேயே மீண்டும் இலங்கை விமானப்படை அணிக்கு கிடைக்கப்பெற்ற இலகுவான கோல் வாய்ப்பு தவறவிடப்பட்டது. இலங்கை விமானப்படையின் அதிரடி ஆட்டத்தால் முதல் சில நிமிடங்களுக்கு குழப்பம் அடைந்திருந்த பங்களாதேஷ் விமானப்படை அணி, பின்னர் வழமையான ஆட்டத்துக்கு திரும்பியது.
இலங்கை விமானப்படை அணியின் பின்கள வீரர்களுக்கு இடையில் பந்தினை நகர்த்தும் பொழுது ஏற்பட்ட தவறினால், பந்து நேரடியாக பங்களாதேஷ் முன்கள வீரரிடம் நகர்த்தப்பட்டது. எனினும் போட்டியை சமப்படுத்திக்கொள்ள பங்களாதேஷ் அணிக்கு கிடைக்கபெற்ற இந்த இலகுவான வாய்ப்பு துரதிஷ்டவசமாக தவறவிடப்பட்டது.
தொடர்ந்தும், இலங்கை பின்கள தடுப்பு வீரர்களின் தவறுகளினால் தொடர்ச்சியாக மூன்று பெனால்டி கோனர்கள் பங்களாதேஷ் விமானப்படை அணிக்கு கிடைத்த போதிலும் அவையனைத்தும் தவறவிடப்பட்டன. அத்துடன், கோல் காப்பாளர் தடுத்து மீண்டும் முன்வந்த பந்தினை ரீபவுண்ட் மூலமாக கோலை பதிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெற்றும், அவ்வாய்ப்புகளும் பங்களாதேஷ் விமானப்படை அணியால் தவறவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில், இலங்கை விமானப்படை அணிக்கும் பெனால்டி கோர்னர் வாய்ப்பு கிடைத்த போதிலும், அதன் மூலம் அவர்களால் உரிய பலனை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வகையில் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இலங்கை விமானப்படை அணி முன்னிலை பெற்றிருந்தது.
முதல் பாதி: இலங்கை விமானப்படை 1-0 பங்களாதேஷ் விமானப்படை
அதன் பின்னர் இரண்டாம் பாதி நேரத்தில், பங்களாதேஷ் விமானப்படை அணி, போட்டியை சமப்படுத்தும் நோக்கில் தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தது. சிறந்த பந்து நகர்த்தல்கள் மூலம் இலங்கை விமானப்படையின் கோல் கம்பங்களுக்கு அருகே சென்ற பந்தினை கோலாக மாற்றுவதற்கு பங்களாதேஷ் விமானப்படை அணியின் முன்கள வீரர்கள் தவறினார்கள்.
இடைவேளையின் பின்னர் இலங்கை விமானப்படை அணிக்கு இரண்டு பெனால்டி கோனர்களும் பங்களாதேஷ் விமானப்படை அணிக்கு ஒரு பெனால்டி கோனரும் கிடைத்த போதிலும், இரு அணிகளாலும் அதனை கோல்களாக மாற்றிக்கொள்ள முடியவில்லை.
ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி
போட்டியின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளாலும் எவ்விதமான கோல்களையும் பதிவு செய்ய முடியவில்லை. அந்த வகையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட நட்பு ரீதியிலான இந்த போட்டித் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இலங்கை விமானப்படை தொடரில் முன்னிலை வகிக்கின்றது.
இரண்டாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் (17) பிற்பகல் நான்கு மணிக்கு மீண்டும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முழு நேரம்: இலங்கை விமானப்படை 1-0 பங்களாதேஷ் விமானப்படை