தசுன் ஷானக்க பெற்ற அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி வலுவான நிலையை எட்டியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தனன்ஜய டி சில்வா தலைமையிலான இலங்கை A அணி மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் A அணியை எதிர்கொள்கிறது.
இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவிய இலங்கை A அணி
மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான முதலாவது உத்தியோகபூர்வமற்ற நான்கு..
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் வெற்றியீட்டிய நிலையில் ஜமைக்காவின் டிரலவ்னி அரங்கில் இலங்கை நேரப்படி நேற்று (19) இரவு ஆரம்பமான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க கருணாரத்னவுக்குப் பதில் வலது கை மிதவேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித அழைக்கப்பட்டார். ராஜித இலங்கை அணிக்காக மூன்று T-20 போட்டிகளில் ஆடியுள்ளார். அதேபோன்று முதல் டெஸ்டில் ஆடிய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு இந்த போட்டியில் இடம் கிடைக்கவில்லை. அதற்குப் பதில் விசேட துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா இணைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. எனினும் இலங்கை அணி 36 ஓட்டங்களை பெறுவதற்குள்ளேயே முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப வீரர்களான சன்துன் வீரக்கொடி (8) மற்றும் ரொன் சந்திரகுப்தா (9) இருவரும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.
எனினும் முதல் டெஸ்டில் தனித்து சதம் பெற்ற அணித் தலைவர் தனன்ஜய டி சில்வா, இடது கை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்கவுடன் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டார்.
சிங்கர் கிண்ண காலிறுதியில் டீஜேய் லங்கா, HNB, LB பினான்ஸ், கென்ரிச் பினான்ஸ் அணிகள்
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு வர்த்தக..
இதன்போது 104 பந்துகளில் 5 பௌண்டரிகளுடன் 41 ஓட்டங்களை பெற்றிருந்த அசலங்க, ரஹ்கீன் கோர்ன்வோலின் பந்துக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இரண்டு ஓவர்கள் கழித்து சிறப்பாக ஆடி வந்த தனன்ஜய டி சில்வாவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 89 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 6 பௌண்டரிகளுடன் 73 ஓட்டங்களை குவித்தார். எனினும், அடுத்து வந்த செஹான் ஜயசூரிய முகம்கொடுத்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேற இலங்கை A அணி 137 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் நெருக்கடியை சந்தித்தது.
இந்நிலையில் 6ஆவது விக்கெட்டுக்காக ரொஷேன் சில்வாவுடன் இணைந்த தசுன் சானக்க போட்டியை இலங்கை பக்கம் திசை திருப்பினார். பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பமான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் கோர்ன்வோல் மற்றும் டேமியன் ஜகப்சுக்கு சானக்க அதிரடி சிக்சர்களை விளாச இலங்கை அணியின் ஓட்டம் வேகமாக உயர்ந்தது.
இதன்போது ரொஷேன் சில்வா மற்றும் தசுன் சானக்க ஜோடி 105 ஓட்டங்களை குவித்தது. சில்வா 70 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 பௌண்டரிகளுடன் 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும் மறுமுனையில் தொடர்ந்து சிக்சர்களை விளாசி அதிரடியாக அடிய சானக்க முதல்தர கிரிக்கெட்டில் தனது 5 ஆவது சதத்தை பெற்றார். 108 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 102 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார். இதன்போது அவர் 5 பௌண்டரிகளுடன் 8 சிக்சர்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது. அதாவது சானக்க பந்தை எல்லைக் கோட்டுக்கு வெளியில் செலுத்தி மாத்திரம் 68 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இலங்கை அணியின் கடைசி வரிசை நான்கு விக்கெட்டுகளும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தபோதும் சானக்க ஒரு முனையில் நின்று ஓட்டங்களை குவித்ததால் அணிக்கு 300 ஓட்டங்களை நெருங்க முடிந்தது.
இதன்மூலம் இலங்கை A அணி தனது முதல் இன்னிங்சுக்காக 73.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.
லாஹூர் T-20 அணிக்கான பரிந்துரை விளையாட்டு அமைச்சரால் நிராகரிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் T-20…
மேற்கிந்திய தீவுகள் தரப்பு சார்பாக ரஹ்கீன் கோர்ன்வோல் மற்றும் டேமியன் ஜகப்ஸ் தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களான மலின்த புஷ்பகுமார மற்றும் ஷெஹான் ஜயசூரிய நெருக்கடி கொடுத்தனர். முதல் ஐந்து ஓவர்களுக்குள்ளேயே பந்துவீச அழைக்கப்பட்ட இவர்கள் எதிரணியின் இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் சாய்த்தனர்.
ஆரம்ப வீரர் மொன்ட்சின் ஹொட்சை 2 ஓட்டங்களோடு புஷ்பகுமார போல்ட் செய்ததோடு, ஜயசூரியவின் பந்தில் மறுமுனையில் ஆடிய ஜோன் கெம்பல் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
முதல்நாள் ஆட்ட நேர முடிவின்போது மேற்கிந்திய தீவுகள் A அணி தனது முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 14 ஓட்டங்களை எடுத்துள்ளது. அணித் தலைவர் ஷமர் பிரூக்ஸ் (3) மற்றும் நைட் வொட்ச்மனாக (nightwatchman) வந்த டேமியன் ஜகப்ஸ் (0) இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர எதிர்பார்த்துள்ளனர்.
எனினும் மேற்கிந்திய தீவுகள் A அணி இன்னும் எட்டு விக்கெட்டுகள் எஞ்சி இருக்கும் நிலையில் இலங்கையை விடவும் முதல் இன்னிங்ஸில் மேலும் 280 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.
இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி 294 (73.3) – தசுன் சானக்க 102*, தனன்ஜய டி சில்வா 73, சரித் அசலங்க 41, ரொஷேன் சில்வா 30, ரஹ்கீன் கோர்ன்வோல் 85/2 டேமியன் ஜகப்ஸ் 74/2
மேற்கிந்திய தீவுகள் A அணி 142 – ஷெஹான் ஜயசூரிய 0/1, மலின்த புஷ்பகுமார 5/1