மேற்கிந்திய தீவுகள் A அணியின் சிறந்த பந்து வீச்சினால் இலங்கை A அணி படுதோல்வி

1515
SL 'A' vs WI 'A' - 2nd unoffical Test

மேற்கிந்திய தீவுகள் A அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக கடினமான வெற்றி இலக்கான 481 ஓட்டங்களை நோக்கி போராடிய இலங்கை A அணியின் போராட்டம் 147 ஓட்டங்களை பெற்ற நிலையில் முடிவுற்றது. இதனால், இலங்கை A  அணி இந்தப் போட்டியில் படுதோல்வி அடைந்தது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும், இலங்கை A அணிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற  நான்கு நாள் கொண்ட  மூன்று டெஸ்ட் போட்டிகளின், இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 11ஆம் திகதி கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. இந்த போட்டியில் சாமர் புரூக்ஸ் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் A அணியும், திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை A அணியும் களமிறங்கியிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணித்தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் மேற்கிந்திய தீவுகள் A அணியினரை துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தார். இதன் அடிப்படையில் தங்களது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் A அணியினர் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து, 137.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 509 ஓட்டங்களை குவித்தனர்.

இதில் திறமையாக ஆடிய விஷாஉல் சிங் 161 ஓட்டங்களையும், ஜஹ்மர் ஹமில்டன் 99 ஓட்டங்ளையும் ராஜேந்திர சந்திரிக்கா 84 ஓட்டங்களையும் பெற்றனர்.  பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பாக சரித் அசலன்க 104 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன் பின்னர், தங்களது முதலாவது இன்னிங்சில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை A அணியினர் 72.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதனால் அவர்கள் மேற்கிந்திய தீவுகள் A அணியினரை விட 264 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தனர்.

இலங்கை A அணி சார்பாக துடுப்பாட்டத்தில், நிரோசன் திக்வெல்ல 88 ஓட்டங்களையும், அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 68 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட மேற்கிந்திய தீவுகள் A அணியின் ரஹீம் கொர்ன்வால் 91 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்பின்னர், தங்களது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் A அணியினர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி,  41 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தி, தங்களது இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக்கொண்டனர்.

இதன்போது துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் A அணியின் ராஜேந்திர சந்திரிக்கா 68 ஓட்டங்களையும், ஜஹ்மர் ஹமில்டன் ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்களாக 56 ஓட்டங்களையும் பெற்றார். பந்து வீச்சில் இலங்கை A அணியின் சுதேஷ் குமார 39 ஓட்டங்களிற்கு ஒரு விக்கெட்டினைப் கைப்பற்றியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் A அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் நிறைவைத் தொடர்ந்து, இலங்கை A அணிக்கு வெற்றி இலக்காக 481 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்பின்னர், பெரிய ஒரு வெற்றி இலக்கை நோக்கி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணியினர், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இலங்கை A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்ன ஆகியோர் முறையே 3, 4 ஓட்டங்களை பெற்று அரங்கு திரும்பிய நிலையில் களத்தில் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அவிஸ்க பெர்னாந்துவும், 11 ஓட்டங்களுடன் ரோசன் சில்வாவும் நின்றிருந்தனர்.

போட்டியின் இறுதி நாளான இன்று எஞ்சியிருக்கும் 445 ஓட்டங்களை நோக்கி தங்களது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை A அணியினர், தங்களது மூன்றாவது விக்கெட்டினை இன்றைய நாளில் வீசப்பட்ட இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் மேற்கிந்திய தீவுகள்  A அணியின் கீயோன் ஜோசேப்பிடம் பறிகொடுத்தனர். இதனால் போட்டியை சமநிலை அடையச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் அவிஸ்க பெர்னாந்து 18 ஓட்டங்களுடன்,  இன்றைய நாளில் எதுவித ஓட்டமும் பெறாமல் வெளியேறி பெரும் ஏமாற்றத்தினை அளித்தார்.

இதற்கு அடுத்த விக்கெட்டும் சொற்ப ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ரன் அவுட் முறையில் பறிபோக, போட்டி மேற்கிந்திய தீவுகள் A அணியினரின் வசமானது. இதன் பின்னர், தொடர்ச்சியான சுழல் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சுக்கள் காரணமாக, இலங்கை A அணி 48.2 ஓவர்கள் முடிவில் 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 333 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

இலங்கை A அணி துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காத போதும் ஜெப்ரி வன்டர்சேய்  3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக பெற்ற 47 ஓட்டங்கள் அணிக்கு ஆறுதல் அளித்தது. பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணியின் கீயோன் ஜோசப், கேமர் ரோச், குடகேஷ் மோட்டி மற்றும் டிலோன் ஜோன்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் A அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. போட்டி தொடர்பான முழு விபரங்களை தமிழில் அறிய ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

ஸ்கோர் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் A அணி: (முதல் இன்னிங்ஸ்) 509/9 Dec (137.4) – விஷாஉல் சிங் 161, ஜஹ்மர் ஹமில்டன் 99, சரித் அசலன்க 104/4

இலங்கை A அணி: (முதல் இன்னிங்ஸ்) 245/10 (72.5) – நிரோசன் திக்வெல்ல 88, திமுத் கருணாரத்ன 68, ரஹீம் கொர்ன்வால் 91/6, கீயோன் ஜோசேப்  39/2

மேற்கிந்திய தீவுகள் A அணி: (இரண்டாவது இன்னிங்ஸ்) 216/3 Dec(41) – ராஜேந்திர சந்திரிக்கா 68, ஜஹ்மர் ஹமில்டன் 56*, சுதேஷ் குமார 39/1

இலங்கை A அணி: 147/10(48.2), ஜெப்ரி வன்டேர்சாய் 47, சரித் அசலன்க 34, டிலோன் ஜோன்சன் 13/2, கேமர் ரோச் 24/2

போட்டி முடிவுமேற்கிந்திய தீவுகள் A அணி 333 ஓட்டங்களால் வெற்றி