இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணி மற்றும் இலங்கை A அணிக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய போட்டியின் தொடர்ச்சி இன்று இடம்பெற்றது. இதில் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக மேற்கிந்திய தீவுகள் A அணியினர் 165 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் A அணி முன்னிலையில் உள்ளது.
நேற்று ஆரம்பித்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணியின் தலைவர் ஜேசன் மொஹம்மட் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சட்விக் வோல்டன் மற்றும் கைல் ஹோப் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 4.5 ஓவர்களிற்கு 40 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் A அணியின் முதலாவது விக்கெட்டாக, கசுன் ராஜிதவின் பந்தில் லஹிரு மிலந்தவிடம் சட்விக் வோல்டன் பிடிகொடுத்து 16 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். இதனை தொடர்ந்து இன்னும் சொற்ப ஓட்டங்களை மேலதிக இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது மேற்கிந்திய தீவுகள் A அணியின் இரண்டாவது விக்கெட்டும் பறிபோனது.
பின்னர் போட்டியில் மழைகுறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டு நாளை (இன்று) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. போட்டி நிறுத்தப்பட்டிருந்த வேளையில் மேற்கிந்திய தீவுகள் A அணியினர் 12.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
இன்று காலை மீண்டும் ஆரம்பித்த இந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் A அணியினர் தங்களது துடுப்பாட்டத்தை தொடர்ந்தனர். நேற்றைய ஆட்டத்தில் களத்தில் நின்றிருந்த கைல் ஹோப் நிதானமாக ஆடி 112 பந்துகளிற்கு 8 பவுண்டரிகள் உள்ளடங்களாக 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவருடன், கைகோர்த்த அணித்தலைவர் ஜேசன் மொஹம்மட் 71 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 58 ஓட்டங்களை பெற்றார்.
பின்னர், 35 பந்துகளிற்கு 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்ளடங்களாக அதிரடியாக ரொவ்மன் பவல் பெற்ற 55 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் A அணி 50 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.
பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பாக, சுழல் பந்து வீச்சாளர் அமில அபோன்சோ 10 ஓவர்களை வீசி 44 ஓட்டங்களிற்கும், பினுர பெர்னாந்து 7 ஓவர்களை வீசி 45 ஓட்டங்களிற்கும் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர், 268 ஓட்டங்கள் என்ற சவலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணியினர், தங்களது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சந்துன் வீரக்கொடியை போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே டிலோன் ஜோன்சனின் பந்து வீச்சில் விக்கெட்காப்பாளர் சட்விக் வால்டன் இடம் பிடிகொடுக்க வைத்து இழந்தனர். இதனால், 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற அவர் அரங்கு திரும்பி ஏமாற்றினார்.
இதனை தொடர்ந்து இணைப்பாட்டம் மூலம் ஓரளவு ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட்டும் 26 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் டிலோன் ஜோன்சனின் பந்து வீச்சில் பறிபோனது. இம்முறை லஹிரு மிலந்த 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால், இலங்கை அணி பெரும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக தொடங்கியது.
இந்த இக்கட்டான நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இலங்கை A அணியின் அடுத்த இரண்டு விக்கெட்டுக்களும் மேலதிக ஓட்டங்கள் எதுவும் பெறாமல் பீட்டோன் இன் பந்து வீச்சில் பறிபோனது. இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனுஷ்க குணத்திலக்க 20 ஓட்டங்களுடனும், இலங்கை A அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தன ஓட்டம் எதுவும் பெறாமலும் வெளியேறி ஏமாற்றினர்.
பின்னர் மேலதிக சொற்ப இணைப்பாட்டத்துடன் 5 ஆவது விக்கெட்டும் மேற்கிந்திய தீவுகளின் சுழல்பந்து வீச்சாளர் ஜக்கேஷர் இடம் பறிபோக, இலங்கை அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுக்களும் மிக வேகமாக சரிய ஆரம்பித்தன. இதனால் இலங்கை A அணி 32.3 ஓவர்கள் முடிவில் 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இலங்கை A அணி சார்பாக அதிகபட்சமாக ஷெகான் ஜயசூரிய 49 பந்துகளிற்கு 1 சிக்ஸர், 1 பவுண்டரி உள்ளடங்களாக 24 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் மிரட்டிய, மேற்கிந்திய தீவுகள் A அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரஸ் ஜக்கேஷர் 10 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், ரோன்ஸ்போர்ட் பீட்டோன் 6.3 ஓவர்களை வீசி 26 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், டிலோன் ஜோன்சன் 4 ஓவர்களை வீசி 19 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் A அணி: 267/6 (50), கைல் ஹோப் 81(112), ஜேசன் மொஹம்மட் 58(71), ரொவேன் பவல் 55(35), அமில அபோன்சோ 44/2(10), பினுர பெர்னாந்து 45/2(7)
இலங்கை A அணி: 102/10 (32.3), ஷெகான் ஜயசூரிய 24(49), தனுஷ்க குணதிலக 20(15), ஜோன்–ரஸ் ஜக்கேசர் 29/4(10), ரொன்ஸ்போர் பீட்டோன் 26/3(6.3), டிலோன் ஜோன்சன் 19/2(4)
போட்டி முடிவு – மேற்கிந்திய தீவுகள் A அணி 165 ஓட்டங்களால் வெற்றி
இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி ஒக்டோபர் 27ஆம் திகதி வெலகதர சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.
மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு