R. பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம் பெற்ற இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள், இளஞ்சிவப்பு பந்து மூலம் அசேல குணரத்ன 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேற்கிந்திய தீவுகள் A அணி, இலங்கை A அணியின் சூறாவளி பந்துவீச்சில் சிக்குண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்த போதும் சமர் ப்ரூக்ஸ் மற்றும் விஷாலுல் சிங் அரைச் சதங்கள் கடந்தனர் .
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இலங்கை A அணிக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் A அணித் தலைவர் சமர் ப்ரூக்ஸ் இலங்கை மண்ணில் முதல் தடவையாக பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு பந்தை விளையாடுவதற்காக முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். 19 வயதுடைய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவின் இந்த முதல் தர அறிமுக டெஸ்ட் போட்டியில் ராஜேந்திர சந்திரிகாவை வெறும் 5 ஓட்டங்களுக்கு தனது நேர்த்தியான பந்து வீச்சில் சிக்க வைத்து LBW முறையில் முதலாவது கன்னி விக்கெட்டைக் கைப்பற்றினார்.
Photo Album: Sri Lanka “A” vs West Indies “A” – 1st Test Match Day 1
தொடர்ந்து, கிரான் பவல் மற்றும் ஜான் கெம்பெல், இரண்டாவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளையில், குணரத்ன 12 ஓட்டங்களைப் பெற்றிருந்த கெம்பலையும், அனுக் பெர்னாண்டோ 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த கிரான் பவலின் விக்கெட்டினையும் தொடர்ச்சியாக வீசிய 3 பந்துகளுக்குள் வீழ்த்தினர்.
அணித்தலைவர் ப்ரூக்ஸ் மற்றும் இடதுகை துடுப்பாட்ட வீரர் விஷாலுல் சிங் நான்காவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களைக் குவித்தனர். விக்கெட்டுக்கு முன்பாக தனது பொறிக்குள் சிக்க வைத்து, வலதுகை துடுப்பாட்ட வீரர் ப்ரூக்ஸை LBW முறையில் 9 பவுண்டரிகள் உட்பட 107 பந்துகளுக்கு 65 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் குணரத்ன ஆட்டமிழக்கச் செய்தார்.
மிகவும் நளினமாக விளையாடிய விஷாலுல் சிங்கும் 9 பவுண்டரிகள் உட்பட 187 பந்துகளுக்கு 96 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து சதத்தினை 4 ஓட்டங்களால் தவறவிட்டார்.
சுழல் பந்து வீச்சாளர்களான சரித அசலங்க, லக்சன் சண்டகனுடன் மற்றும் குணரத்ன ஓட்டங்கள் பெறுவதைக் கட்டுப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டிருந்தனர். எனினும் மறுமுனையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த கெமர் ரோச் 116 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
இளவயது வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ சற்றே தாமதித்திருந்தாலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இனிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் A அணியை 276 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினார்.
தொடர்ந்து, களம் இறங்கிய இலங்கை A அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஒரு ஓவரை மட்டும் எதிர் கொண்ட நிலையில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவுற்றதாக நடுவர்கள் அறிவிக்க, முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் A அணி – 276 (86.4) விஷாலுல் சிங் 96, சமர் ப்ரூக்ஸ் 65, கெமர் ரோச் 45*, கிரான் பவல் 36, அசேல குணரத்ன 27/3, அசித்த பெர்னாண்டோ 35/2, சரித் அசலாங்க 53/2
இலங்கை A அணி – 0/0 (01 ஓவர்)